நாளை கோவையின் இந்த பகுதியில் ஆய்வு நடத்தி, 1 நாள் தங்கி மக்களிடம் நேரில் குறைகளை கேட்க வருகிறார் கலெக்டர்
- by David
- Mar 18,2025
'உங்களை தேடி உங்கள் ஊரில்' எனும் தமிழக அரசு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஒரு மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு தாலுகாவில் அந்த மாவட்ட கலெக்டர் தங்கி மக்களின் குறைகளை கேட்கவேண்டும், கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த மாதம் கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள மக்களின் குறைகளை நேரடியாக கேட்டு நிவர்த்தி செய்ய, கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் IAS நாளை (19.3.25) அங்கு நேரில் செல்கிறார். அங்கு அவர் நாளை காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை தங்கியிருப்பாா். அவருடன் மாவட்ட முதல்நிலை, துறையின் தலைமை அலுவலா்களும் தங்கியிருந்து கள ஆய்வு செய்து மக்களுக்கான திட்டங்கள் உடனடியாக கிடைப்பதை உறுதி செய்வாா்கள்.
நாளை மேட்டுப்பாளையம் வட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளா் அலுவலகங்கள், பேரூராட்சி, வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அலுவலா்கள் பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெறுவார்கள்.
அத்துடன் நாளை பொதுமக்கள் கலெக்டர் பவன்குமாரிடமே பொதுமக்கள் தங்களின் மனுக்களை நேரடியாக வழங்கவும் வழிசெய்யப்பட்டுள்ளது. அதன்படி மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் மதியம் 3 மணி முதல் 4 மணி வரை அவரிடம் நேரடியாக மக்கள் மனு அளிக்க முடியும்.