கோவை மாநகரில் அமைந்துள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்கள் உள்ளன.

இந்த அலுவகத்தில் கடந்த ஆண்டு மட்டும் கடவுசீட்டு (பாஸ்போர்ட்) வேண்டும் என்று 1.83 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், மொத்தம் 1.77 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளதாக இம்மையத்தின் பாஸ்போர்ட் அலுவலர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

2008ல் கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இத்தனை பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுவது இதுவே முதல் முறை. 2022ல் 1.61 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 1.57 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.

இதனால் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து  வெளிநாடுகளுக்கு பறக்க வேண்டும் என்று விரும்புவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதை காணமுடிகிறது.

2023ல் சமர்ப்பிக்கப்பட்ட 30% விண்ணப்பங்கள் குன்னூர், ஈரோடு, சேலம், ராசிபுரம் தபால் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவை மையம் மூலமாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.