2023 ஆகஸ்ட் மாதத்தில் துவங்கிய கோவை மேற்கு புறவழிச் சாலை பணிகள் மூன்று கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

 

மொத்தம் 32.42 கிலோமீட்டர் தொலைவிற்கு அமையும் இந்த நான்கு வழி சாலையில் முதல் கட்ட பகுதி மதுக்கரையில் துவங்கி மாதம்பட்டி வரை 11.80 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைகிறது. 

தற்போது இந்த முதல் கட்ட பணிகள் 58% நிறைவடைந்துள்ளது என்று நெடுஞ்சாலைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதல் கட்ட பணிகள் ஆகஸ்ட் மாதம் 2025ல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் கட்டப் பணிகள் மாதம்பட்டி முதல் கணுவாய் வரை 12.10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைகிறது. இரண்டாம் கட்ட பணிகளுக்கு தேவைப்படும் நிலங்களில் 95 % நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

ரூ. 340 கோடி மதிப்பீட்டில் இந்த இரண்டாம் கட்ட பணிகள் நடைபெறும் எனவும் இந்த திட்டத்தின் கீழ் மூன்று மேம்பாலங்கள் - தொண்டாமுத்தூர் சந்திப்பு, பாரதியார் பல்கலைக்கழகம் அருகே மற்றும் பன்னி மடையில்- அமைக்கப்படும் என தெரிய வருகிறது. 

கோவை மேற்கு புறவழிச் சாலை திட்டத்தின் மொத்த பணிகளையும் 2027 இறுதிக்குள் முடிக்க திட்டம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

தற்போது இந்த புறவழிச் சாலை திட்டத்தின் முதல் கட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.