2014ல் அதிமுக தலைமையிலான ஆட்சியின் போது,அப்போதைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவால் கோவைக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்த பேருந்து நிலையம் அமைவதால், கோவை மாநகருக்குள் வரும் வெளியூர் பேருந்துகள், ஆம்னி பேருந்துகளை ஒரே இடத்திலிருந்து இயக்க முடியும். இதனால் கோவை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசல் குறையும் என கூறப்பட்டது. இதற்காக வெள்ளலூர் தேர்வு செய்யப்பட்டு, அங்கு பணிகள் பல ஆண்டுகால தாமதத்திற்கு பின்னர் 2020ல் ஆரம்பமானது.

ரூ.50 கோடி செலவில் சுமார் 40% பணிகள் நிறைவேறிய நிலையில், கொரோனா காலத்தில் பாதுகாப்பு கருதி  இந்த திட்டப்பணிகளுக்கு போடப்பட்ட வேகத்தடை நிரந்தர தடையாகவே மாறியது. சமீபத்தில் இந்த பேருந்து நிலையம் அமைந்த வளாகத்தை மொத்த விலை காய்கறி & பழ மார்க்கெட் மற்றும் லாரி பேட்டை ஆக மாற்ற கோவை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

ஒருவேளை திட்டமிட்டபடி இந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் வெள்ளலூரில் நிறைவு பெற்று இருந்தால், கோவை மாநகருக்குள் உக்கடம், காந்திபுரம் மற்றும் சிங்காநல்லூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள புறநகர் பேருந்து நிலையங்கள் மற்றும் காந்திபுரத்தில் உள்ள ஆம்னி பேருந்து நிலையம் வெள்ளலூருக்கு மாற்றப்பட்டிருக்கும். இதனால் மாநகருக்குள் வரக்கூடிய பேருந்துகளின் எண்ணிக்கை மற்றும் போக்குவரத்து நெரிசல் குறைந்திருக்கும்.

ஆனால் இப்போது பல கோடி ரூபாய் மதிப்பில் சிங்காநல்லூர் பேருந்து நிலையம், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பஸ் ஸ்டான்ட் அனைத்தும் சீரமைக்கப்படுகிறது. அங்கு பல வசதிகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநகர பகுதியில் இருக்கும் இந்த பேருந்து நிலையங்கள் தரமுயர்த்தப்படுவது ஒருபுறம் வரவேற்கத்தக்கது என்றாலும் கோவையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் இப்போதைக்கு அமையாது என்பதை தான் காட்டுகிறது. கோவை மாநகராட்சி நிர்வாகமோ ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் குறித்த முடிவுகள் மாநில அரசின் கையில் உள்ளது என கூறியுள்ளது.