வெள்ளலூரில் காய்கறி மார்கெட் வேண்டாம் என வியாபாரிகள் கருத்து; என்ன செய்யப்போகுது கோவை மாநகராட்சி?
- by David
- Jan 04,2025
கோவை வெள்ளலூர் பேருந்து நிலையம் உருவாகி வந்த 60+ ஏக்கர் வளாகத்தை மொத்த விலை காய்கறி, பழ மார்கெட் மற்றும் லாரி பேட்டையாக மாற்றியமைக்க கோவை மாநகராட்சி திட்டமிட்டு தீர்மானம் நிறைவேற்றியது அண்மையில்.
இதற்கு வெள்ளலூர் பகுதி மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தீர்மானம் கொண்டுவரப்பட அந்த நாளில் அதிமுக கவுன்சிலர்கள் தரப்பில் இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதுபற்றி கோவையிலுள்ள எம்.ஜி.ஆர். மார்கெட் மற்றும் தியாகி குமரன் மார்கெட் வியாபாரிகள் உடன் கோவை மாநகராட்சி தரப்பில் நேற்று ஆலோசனை செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில், வெள்ளலூர் பேருந்து நிலையத்தில் காய்கறி மார்கெட் அமைக்கப்படுவது சரியானதாக இருக்காது என்ற கருத்து வலுத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மொத்தவிலை காய்கறி மார்கெட் அமைய போதிய இடவசதி இல்லை என்பதும், இந்த இடத்தின் அருகே வெள்ளலூர் குப்பைகிடங்கு இருப்பதும் தான்.
வெள்ளலூர் பேருந்து நிலையத்தில் உள்ள 60 ஏக்கர் நிலத்தில் எம்.ஜி.ஆர். காய்கறி மார்கெட் வியாபாரிகள் 112 அவர்களின் காய்கறி கடைகளை அமைக்க குறைந்தது 20 ஏக்கர் தேவை என வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அந்த 60 ஏக்கர் நிலத்தில் 5.5 ஏக்கர் மட்டுமே காய்கறி மார்கெட் அமைக்க ஒதுக்கப்படவுள்ளது என தெரியவருகிறது.
தியாகி குமரன் மார்கெட் தற்போது அமைந்துள்ள இடம் 6 ஏக்கருக்கும் அதிகமான இடமாகும். எனவே அதைவிட பெரிய அளவு இடம் கிடைத்தால், அந்த இடம் வெள்ளலூர் குப்பைக்கிடங்கு இடத்திற்கு அருகே இல்லாமல் இருந்தால் வியாபாரிகள் அங்கு வர ஆர்வம் காட்டுவார்கள்.