தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட விதிகள் 2019ன் படி குடியிருப்பு, வணிகம், தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைக்கு 3,000 சதுர மீட்டரிலிருந்து 10,000 சதுர மீட்டர் வரை கட்டிடப் பணிகள் மேற்கொள்ளும் போது அதில் 10% நிலத்தினை திறந்த வெளி நிலமாக (Open Space Reservation Land) பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும்.

அதாவது கட்டிடத்தின் மொத்தப் பரப்பில் 10 %  திறந்த வெளி நிலமாக ஒதுக்கி அதை மாநகராட்சிக்கு வழங்கவேண்டும். இல்லை என்றால் அந்த 10% நிலத்திற்கான வழிகாட்டுதல் விலையை வழங்க வேண்டும்.

இவ்வாறு வழங்கப்படும் OSR நிலங்களில் அரசு பிற்காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான பூங்கா, விளையாட்டு திடல் போன்றவற்றை உருவாக்கும்.

கோவை மாநகரில் இதுவரை 2232 OSR நிலங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. (அதாவது சுமார் 550 ஏக்கர் நிலம்) இதன் மதிப்பு ரூ.16,000 கோடி+ இருக்கும். இவற்றில் மொத்தம் 1137 OSR நிலங்களை கோவை மாநகராட்சியின் பெயருக்கு வருவாய் துறை மாற்றிக்கொடுத்துள்ளது. OSR நிலமாக அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த இடங்களில் சுமார் 50% பூங்காவாக /விளையாட்டு மைதானமாக பொது பயன்பாட்டில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 3 ஆண்டுகளில் 400க்கும் அதிகமான OSR நிலங்களில் வேலிகள் அமைக்கப்பட்டு, அந்த நிலம் மாநகராட்சிக்கு சொந்தம் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. வரும் 2 மாதங்களில் 567 OSR நிலங்கள் கோவை மாநகராட்சியின் பெயருக்கு மாற்றப்படவுள்ளது.

முதல்கட்டமாக இந்த ஆண்டில் 25 OSR நிலங்களை பூங்காக்களாக மாற்ற கோவை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது. கோவை மாநகரின் ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு பெரிய பூங்கா OSR நிலம் இருந்த இடத்தில் உருவாக்கிட திட்டமிட்டுள்ளது. இங்கு மரங்கள் நடுவதால் மாநகருக்குள் சுத்தமான காற்று அதிகம் வரும் என இயற்கை ஆர்வலர்கள் நம்புகின்றனர். இங்கு பூங்காக்கள் அமைக்க மாநில அரசிடம் நிதி கேட்கப்பட்டுள்ளது.

மாற்றம் வேண்டுமென கேட்கும் சமூக ஆர்வலர்கள்!

3,000 சதுர மீட்டரிலிருந்து 10,000 சதுர மீட்டர் வரை கட்டிடப் பணிகள் மேற்கொள்ளும் போது மொத்தப் பரப்பில் 10 %  திறந்த வெளி நிலமாக ஒதுக்கி அதை மாநகராட்சிக்கு வழங்கவேண்டும். இல்லை என்றால் அந்த 10% நிலத்திற்கான வழிகாட்டுதல் விலையை வழங்க வேண்டும் என்ற மாற்று வழிமுறை இருப்பதால், பலரும் நிலத்தை தருவதை விட வழிகாட்டுதல் விலையை தந்துவிட்டு நிலத்தை தக்கவைக்கின்றனர்.

நிலத்தின் சந்தை விலையை (MarketValue) வழிகாட்டுதல் விலை (Guideline Value) குறைவு என்பதால் இம்மாதிரியான நடவடிக்கையை பலரும் பின்பற்றுகின்றனர். இதனால் கான்க்ரீட் கட்டிடங்கள் மட்டுமே நகருக்குள் இருக்கும் சூழல் வருவதால், அரசு விதிமுறையை மாற்றம் செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.