கோவை மாநகருக்கான 'மாஸ்டர் பிளான்' வரைவு அறிக்கை மீது தொழில்துறையினர் மற்றும் மக்கள் எதிர்பாராத அளவில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளதால் அவற்றை ஆராயும் பணி நடைபெற்று வருகிறது. எனவே அதை முடித்து, பரிந்துரைகளை சேர்த்து, மாஸ்டர் பிளான்னை இறுதியாக இன்னும் சில மாதங்கள் ஆகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க : மாஸ்டர் பிளான்னா என்ன? அதனால கோவைக்கு என்ன பயன்?


கோவை மாநகரின் மாஸ்டர் பிளான் 1994ல் தான் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது. கோவை மாநகரில் 2041 ஆம் ஆண்டில் 45 லட்சம் மக்கள் வசிப்பார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே அப்போது தேவைப்படும் பொது உள்கட்டமைப்புகள், வசதிகள், மேலாண்மை திட்டங்கள் என பலவற்றை கருத்தில் கொண்டு ஒரு புது மாஸ்டர் பிளான் மாநகருக்கு வேண்டும் என்ற வேண்டுகோள் தொழில்துறை, சமூகம்&இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டது.


அதையடுத்து பல மாதங்களாக வெவ்வேறு அரசு துறைகள் கோவை மாநகராட்சியுடன் இணைந்து ஒரு வரைவு மாஸ்டர் பிளான்-னை  உருவாக்கின. இது கோவை மாவட்ட நிர்வாகத்தால் 2023 அக்டோபர் மாதம் தமிழக அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.  இதற்கு அரசு ஒப்புதல் தந்து 2024 பிப்ரவரி 11 ஆம் தேதி அன்று இந்த வரைவு அறிக்கையை https://coimbatorelpa.com/ எனும் இணையதளம் மூலம் வெளியிட்டது. இந்த அறிக்கையை மக்கள் பார்க்கவும், தங்கள் கருத்துக்களை சொல்லவும் மே 15, 2024 வரை அவகாசம் வழங்கப்பட்டது.

பொது கருத்துக்களை கேட்டபின்னர் அவற்றை சேர்த்து இறுதி அறிக்கை வெளியாகும் என கூறப்பட்டது. இந்நிலையில் இதன் மீது 3000 பொது கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனை வந்துள்ளது. இவற்றை முழுமையாய் ஆராய்ந்து முடிக்கவே 2 மாதங்கள் ஆகும். அதன் பின்னர் அவற்றை சேர்த்து, திருத்தப்பட்ட அறிக்கை தயார் செய்து, அதை தமிழக அரசின் நகர் ஊரமைப்பு இயக்ககத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதற்கு பின் அதிகாரிகள் இந்த அறிக்கையை பார்த்து உறுதி செய்தபின்னர் இது இறுதி ஆகும். இந்த பணிகள் எல்லாம் முடிய ஜனவரி 2025 வரை ஆகிவிடும் என தெரியவருகிறது.