2024 ஏப்ரல் மாதம் கோவைக்கு உலக தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானம் வேண்டுமென அமைச்சர் TRB ராஜா விடுத்த கோரிக்கை வலுப்பெற்று இப்போது ஒண்டிப்புதூர் திறந்த வெளி சிறை அமைந்துள்ள 20 ஏக்கர்  இடத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டு, அந்த இடத்தில் உள்ள நிலத்தை விளையாட்டு துறைக்கு மாற்றி தர கோவை மாநகராட்சியிடம் வருவாய்த்துறை தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் மைதானம் அமைத்திட இவ்வளவு குறுகிய காலத்தில் நடவடிக்கைகள் வேகமாக நடைபெறுவதை பார்க்க ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் 2020 ஜனவரியில் அதிமுக அரசு காலத்தில் துவங்கி, கொரோனா ஊரடங்கு காலத்தில் நின்றுபோன வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திட்டம் மீண்டும் தொடராமல் இருப்பது மக்களிடம் வருத்தத்தை ஏற்படுத்துகின்றது. 

வெள்ளலூரில் 61 ஏக்கர் நிலத்தில் ரூ.168 கோடி மதிப்பில் துவங்கிய இந்த திட்டதின் மீது சுமார் ரூ. 40 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது.  இதை முழுமையாக முடித்திட அரசு வேகம் காட்டுமா என்று கோவை மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

என்ன கூறியது திமுக தலைமையிலான அரசு? 

2024 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் 2ம் நாள் கூட்டத்தின் போது நடைபெற்ற கேள்வி பதில் நேரத்தில், முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான SP வேலுமணி பேசுகையில், வெள்ளலூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு 50% பணிகள் முடிக்கப்பட்டு பாதியில் நிற்கிறது என்பதை சுட்டிக்காட்டி, இதை விரைவில் முடித்து தர வேண்டும் என்று கோவை மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் என்பதை சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் நேரு, பேருந்து நிலையதிற்கான இணைப்பு சாலைகள் சரியாக இல்லை, திருச்சியில் இருந்து வருகிற சாலையும் அதை ஒட்டி வருகிற சாலையும் அகலப்படுத்தப்பட்டால் தான் பேருந்து நிலைய திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்படும். எனவே இந்த ஆண்டு அந்தப் பணிகள் எடுத்து முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறினார்.

ஆனால் அதற்கு அடுத்து பேருந்து நிலையம் தொடர்பாக பெரிய நகர்வுகள் எதுவும் நடைபெறவில்லை.

இந்த நிலையில், தமிழக சட்டசபை கடந்த 20 ஆம் தேதி மீண்டும் கூடியது. இதில் அதிமுக தரப்பில் கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து விவாதிக்கவேண்டும் என வலியுறுதிப்பட்டு வரப்படுவதால் மீண்டும் வெள்ளலூர் பேருந்து நிலையம் பற்றி பேச்சு எழாமல் உள்ளது.

மாநில அரசு தான் முடிவெடுக்க வேண்டும்!

வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகள் மீண்டும் நடைபெறவேண்டும் என்பதை அரசிடம் வலியுறுத்த கோவை மக்கள் சிலர் குழுவாக சேர்ந்து வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய மீட்பு குழுவை செப்டம்பர் 2023ல் உருவாக்கினர்.

கோவை மக்களுக்காக கொண்டுவரப்பட்டு தற்போது பாதியில் நிற்கும் இந்த ஒருங்கிணைந்த பேருந்து திட்டம் மீண்டும் துவங்கபட மாநில அரசிடமும்,  மாவட்ட ஆட்சியர் போன்ற உயர் அதிகாரிகளிடமும் மனுக்களை வழங்கி, இந்த பணியை வேகப்படுத்த இந்த குழு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் மீட்பு குழுவை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மோகன் கடந்த மார்ச் மாதம் வெள்ளலூர் பேருந்து நிலைய திட்டம் பற்றி முதலமைச்சரின் கவனத்திற்கு(Chief Minister's Special Cell) கடிதம் எழுதியபோது, அது அங்கிருந்து கோவை மாநகராட்சி தலைமை பொறியாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தலைமை பொறியாளரிடமிருந்து சென்ற மாதம் பதில் வழங்கப்பட்டது. அதில் "வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமான பணியானது அரசின் இறுதி உத்தரவிற்கு பின்னர் தொடரப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

மக்கள் கோரிக்கை!

வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய மீட்பு குழுவை சேர்ந்த மோகனிடம் கேட்டபோது, அவர் கூறியது; அரசு நினைத்தால் இந்த திட்டத்தை உடனே மீண்டும் ஆரம்பிக்க உத்தரவிட முடியும். இந்த திட்டத்திற்காக மக்கள் பணம் சுமார் ரூ.40 கோடிக்கு மேல் செலவாகி உள்ளது. இந்த பேருந்து நிலையம் அமைவதால் மாநகரில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், போத்தனூர், வெள்ளலூர் வளர்ச்சியடைய உதவியாக இருக்கும். 

கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் இந்த திட்டம் மீண்டும் துவங்க படவேண்டும் என தீர்மானம் கொண்டுவந்தால் இது மீண்டும் வலுப்பெற வாய்ப்புள்ளது, என்றார்.