கோவை மாநகரம் முழுவதும் இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மட்டுமல்லாது வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்களும் தலைக்கவசம் அணிந்து செல்வதை உறுதிப்படுத்த காவல் துறை தரப்பில்  விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

சென்ற ஆண்டு ஜூன் மாதம் முதலே 2 சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்களும் ஹெல்மெட் அணியவேண்டும் என்ற மோட்டார் வாகன சட்டம் 2019ல் கூறப்பட்டுள்ளதை கட்டாயமாக்க கோவை மாநகர காவல் துறையினர் முடிவு செய்தனர்.

அவ்வாறு கட்டாயமாக்கிய முதல் நாளில் (26.6.2023) மட்டும் ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து வந்த 185 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. அவர்களிடம்  அபராதமாக மொத்தம் ரூ.1.85 லட்சம் விதிக்கப்பட்டது. ஆனால் அதற்கு அடுத்து இந்த நடைமுறை தீவிரமாக முன்னெடுக்கப்படவில்லை.

இந்நிலையில் கோவை மாநகரம் முழுவதும் பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்களும் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்ய நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று தெரிவித்துள்ளார்.

அதேபோல பள்ளிகளில் குழந்தைகளை இறக்கிவிடவும், மாலை வீட்டிற்கு கூட்டிச்செல்லவும் வரும் பெற்றோர், குடும்பத்தினர் தலைக்கவசம் அணியாமல் இருப்பது அதிகரிப்பதால், அவர்களிடம் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கோவை மாநகர காவல் துறை திட்டமிட்டுள்ளது.

இதுபற்றி கோவை மாநகரில் உள்ள அணைத்து பள்ளிகளின் நிர்வாக குழு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்- ஆசிரியர் சங்கத்தினருடன் பேச காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.