கோவை மாநகரில் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்படும் சாலைகள் சரிவர மூடப்படுவது இல்லை என்றும் அவ்வாறு மூடப்பட்டாலும் மீண்டும் மீண்டும் தோண்டி அதை சீரமைக்காமல் அப்படியே விட்டுச் செல்வதாகவும் இந்த திட்டத்தை முன்னெடுக்கும் சூயஸ் நிறுவனத்தின் மீதும் மாநகராட்சியின் மீதும் கோவை மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
கோவை மாநகராட்சியில் நேற்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்திற்கு திடீரென்று வருகை புரிந்த கோவை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கணபதி ராஜ்குமார், பல ஆண்டுகளாக கோவை மக்கள் மனதில் இந்தப் பணிகளுக்காக சாலைகள் பல்வேறு பகுதிகளில் சேதம் அடைந்து இருக்கும் வருத்தத்தை கேள்விகளாக மாநகராட்சியில் எழுப்பினார்.
24 மணி நேர குடிநீர் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் தாமதமாக நடைபெறுகிறது எனவும், இதை முன்னெடுக்கும் சூயஸ் நிறுவனம் செய்யும் வேலையின் தரத்தை பற்றி அவர் கேள்விகளை எழுப்பியதாகவும், குறிப்பாக வீடுகளுக்கு இணைப்புகளை வழங்குவதில் ஏற்படும் தாமதம் பற்றி பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த 24x7 குடிநீர் திட்டத்திற்காக ரோடுகளை தோண்டி போட்டு மாத கணக்கில் அதை மூடாமல் உள்ளனர் என்று அவர் விமர்சித்தார்.
"தோண்டப்பட்ட சாலைகள் உடனடியாக சீரமைக்கப்படுவது இல்லை. மிகப் பெரிய தாமதம் ஏற்படுகிறது. சூயஸ் நிறுவனம் யாருக்கு கட்டுப்படும் என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. மக்கள் செல்லும் இடமெல்லாம் பிரச்சனையாக உள்ளது. மக்கள் ஒரு வேலைக்கு சென்று வருவதற்குள் படாத பாடு படுகின்றனர்," என அவர் நிருபர்களிடம் பேசுகையில் கூறினார். கோவை மாநகராட்சி அதிகாரிகளால் இதை கட்டுப்படுத்த முடியாதா என அவர் கேள்வி எழுப்பினார்.
இத்திட்டம் தாமதமாக நடைபெற்று வருவதால், பல கோடி ரூபாய்களை கொண்டு சாலைகளை புதிதாக அமைக்க முயற்சிகள் எடுத்தாலும் அந்த பணிகளை செயல்படுத்துவது சவாலாக இருப்பதாக தெரிவித்தார்.
சாலையோரங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து மாநகராட்சியும், உணவு பாதுகாப்புத்துறையும் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். மேலும் கோவை மாநகரில் ஏற்படும் தெரு நாய் தொல்லைகளுக்கு தீர்வு வழங்க அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார்.
சூயஸ் நிறுவனம் செயல்படுத்தும் குடிநீர் திட்டப்பணி: சேதமடையும் கோவை ரோடுகள் பற்றி சக்க போடு போட்ட பாராளுமன்ற உறுப்பினர்!
- by David
- Feb 08,2025