கோவை மாநகர் கணபதி பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என நெடு நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இன்று மதியம் அந்த பகுதியில் கோவை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மற்றும் அரசு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

இந்த பகுதியில் ஆய்வின் போது லேசான மழை பொழிவு இருந்த போதிலும் கோவை பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் கணபதி சூர்யா மருத்துவமனை ட்ராபிக் சிக்னல் பகுதியில் இன்று ஆய்வை தொடங்கி சி.எம்.எஸ். பள்ளி வரை நடந்து சென்று ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வுக்கு பின்னர், கோவை மாவட்ட ஆட்சியாளர் கிராந்தி குமாரிடம் பேசுகையில், அவர் கூறியது:-

சத்தி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்து வருகிறது என்பதால் இங்கு நெடுஞ்சாலைத்துறை, கோவை மாநகராட்சி சார்பில் இதுகுறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இங்கு போக்குவரத்து நெரிசலை குறைக்க உடனடியாக என்ன செய்ய முடியும், கால அவகாசம் எடுத்து என்ன செய்ய முடியும் என்பதை பற்றிய ஆலோசனையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இங்கு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால் சாலை விரிவாக்கம் செய்வதற்கான இடம் கிடைக்கும் என்ற கருத்து ஆய்வின் பின் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த பணிகள் விரைவில் துவங்கும், என்றார். சக்தி ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, கணபதி வேலன் தியேட்டர் முதல் சூர்யா மருத்துவமனை வரை சாலை விரிவாக்கம் செய்ய நிதி ஒதுக்க வேண்டும், இது பற்றி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என 2020 அக்டோபர் மாதம் கோவை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இங்கு சாலைகளை அகலப்படுத்த நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என தெரிய வருகிறது.இங்கு 3 மீட்டர் அளவுக்கு சாலை விரிவாக்கம் செய்ய திட்டமுள்ளது. 73,000 சதுர அடி நிலம் விரிவாக்கத்திற்கு தேவைப்படுகிறது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் நிலத்தை கையகப்படுத்தும் பணி 1-2 மாதங்களில் பணிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Photos: David Karunakaran.S