கோவை மாநகர மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஜூலை 3 ஆம் தேதி, தனது உடல் நிலை காரணமாக மேயர் பதவியில் இருந்து விலகுவதாக கோவை மாநகராட்சி ஆணையரிடம் கடிதம் ஒன்றை சமர்ப்பித்தார்.

இது பற்றிய முடிவு ஜூலை 8 ஆம் தேதி கூட்டப்படும் சிறப்பு மாமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று கோவை துணை மேயர் வெற்றிச்செல்வன் தலைமையில், ஆணையர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சுமார் 65க்கும் அதிகமான மாமன்ற உறுப்பினர்கள் (கவுன்சிலர்கள்) பங்கேற்றனர்.

மேயரின் ராஜினாமா கடிதம் கவுன்சிலர்களுக்கு வாசித்து காட்டப்பட்டபோது , அதிமுக மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் எழுந்து, மேயர் எந்த காரணத்திற்காக ராஜினாமா செய்தார் என கேள்வியெழுப்பினர்.

இதற்கு திமுக மாமன்ற உறுப்பினர்கள் பதில் தெரிவிக்க இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அ.தி.மு.க, ஆட்சியில் மேயராக இருந்த செ.ம.வேலுசாமி ராஜினாமா செய்ததை நாங்கள் கேட்டோமா என மேயர் வெற்றிச்செல்வன் தி.மு.க, கவுன்சிலரிடம் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, கல்பனாவின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அது நகராட்சி நிர்வாக துறைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இதையடுத்து வெறும் 9 நிமிடங்களே நடைபெற்ற இந்த சிறப்புக்கூட்டத்தை வெற்றிச்செல்வன் ஒத்திவைத்தார். இதுபற்றிய விவாதம் அடுத்த மாமன்ற கூட்டத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டம் வெறும் 9 நிமிடங்களிலேயே முடிக்கப்பட்டது என தகவல்கள் கூறுகின்றது.