கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாடு நினைவாக கோவை மத்திய சிறைவளாகத்தில் 165 ஏக்கரில் பிரம்மாண்டமான முறையில் செம்மொழி பூங்கா உருவாகி வருகிறது.

பூங்காவிற்கு 18.12.23 அன்று  அடிக்கல் நாட்டினார். 2 கட்டங்களாக நடைபெறும் இந்த திட்டப்பணியில் முதல் கட்டம் - 45 ஏக்கர், இரண்டாம் கட்டம் - 120 ஏக்கர் என பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் முதல் கட்டத்தில் உள்ள 45 ஏக்கரில் 25 ஏக்கருக்கு 23 வகை தனித்துவமான தோட்டங்கள் அமைகிறது. மீதம் உள்ள 20 ஏக்கர் நிலத்தில் 1000 சதுர அடியில் உலக தரம் கொண்ட பல்நோக்கு மாநாட்டு மையம், திறந்தவெளி அரங்கம், 300 கார்கள் நிறுத்தும் அளவிற்கான பார்க்கிங் வசதி, செயற்கை நீரூற்று என மற்றும் சில கட்டமைப்புகள் உருவாகின்றன.

இன்று செம்மொழிப்பூங்கா கட்டுமானப்பணிகளை கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்தப் பூங்காவில் தோட்டங்கள் அமைப்பதற்காக செய்யப்பட்டு வரும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். இந்த பூங்காவில் மொத்தமாக 2.5 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் நிறைவடைந்த இடங்களில் செடிகள் நடப்பட்டு வருகிறது.

இப்பூங்காவில் குறிஞ்சி வனம், செம்மொழி வனம், மர வனம் ஆகியவை அமைகின்றன. மகரந்தப் பூங்கா, நறுமணப் பூங்கா, மூலிகைப் பூங்கா போன்ற 23 வகையான தோட்டங்கள் உருவாகிறது. இதற்காக சுமார் 60,000 மரக்கன்றுகள் ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து பெறப்பட்டுள்ளது. வரும் மே மாதத்தில் இந்த பூங்கா பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே செடிகள் நடும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.