கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மேயர் ரங்கநாயகி இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.55க்குட்பட்ட எஸ்.ஐ.ஹெச்.எஸ்.காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாநில நிதிக்குழு திட்டத்தின்கீழ் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகளை மேயர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணியினை விரைவாக செய்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், அப்பகுதியில் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து. வார்டு எண்.7க்குட்பட்ட காளப்பட்டி இளங்கோ நகர் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் செயல்பட்டுவரும் மாநகராட்சி சிறுவர் பூங்காக்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பூங்காக்களை சிறந்த முறையில் பராமரித்திடவும், காளப்பட்டி, இளங்கோ நகர் பகுதிகளில் சேதமடைந்த மழைநீர் வடிகால்களை உடனடியாக புனரமைத்திடவும், மேலும், அப்பகுதியிலுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை சுற்றி கம்பி வேலி அமைத்திடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

வார்டு எண்.7க்குட்பட்ட காளப்பட்டி, ஆர்.ஜி.புதூர் பகுதியில் செயல்பட்டுவரும் நியாயவிலை கடையில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்களின் தரம் மற்றும் இருப்புகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர், காளப்பட்டி, ஸ்டாலின் நகர் பகுதியில் சேதமடைந்த மழைநீர் வடிகால் மற்றும் சிமென்ட் தரை ஆகியவற்றை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், காளப்பட்டி, ஆர்.ஜி.புதூர் பகுதியில் புதிதாக நகர்நல மையம் அமையவுள்ள இடத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.