கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக கோவை மேயர் ரங்கநாயகி கோவை மாநகராட்சியின் 24x7 குடிநீர் திட்ட பணிகளை செயல்படுத்தும் சூயஸ் நிறுவன அதிகாரிகளுடன் இந்த திட்டத்தின் நிலைபற்றி ஆலோசனை நடத்தினர்.

எங்கெல்லாம் பணிகள் வேகமாக நடக்கிறது, வேறு எங்கெல்லாம் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது என கேட்டறிந்த மேயர், பணிகளை விரைவில் நிறைவேற்றி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர சத்தியம் உள்ளதா என்பதையும் பற்றி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். இதற்கான விளக்கத்தை வழங்கிய அதிகாரிகள், இந்த 24x7 குடிநீர் திட்டத்தை இன்னும் 10 மாத காலத்திற்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வாய்ப்புள்ளதாக கூறியதாக தெரியவந்தது.

இந்நிலையில் இன்று மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சூயஸ் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்று வரும் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளை மேயர் ரங்கநாயகி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கிழக்கு மண்டலம், வார்டு எண்.50க்குட்பட்ட வடக்கு விநாயகர் கோவில் வீதி-2 பகுதி மற்றும் வார்டு எண்.57க்குட்பட்ட ஒண்டிப்புதூர், செந்தில் ஜனதா நகர் பிரதான சாலையில் ஆகிய இடங்களில் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளை மேயர் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

கடந்த மாதம், நடைபெற்ற மாமன்ற கூட்டத்திற்கு திடீரென்று வருகை புரிந்த கோவை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கணபதி ராஜ்குமார், இந்த 24x 7 குடிநீர் திட்டத்திற்காக சூயஸ் நிறுவனத்தால் செய்யப்படும் பணிகள் தாமதமாக நடைபெறுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை முன்வைத்து அந்த ஒப்பந்த நிறுவனத்தை லெப்ட் ரைட் வாங்கினார்.

அந்த கூட்டத்தில், சூயஸ் நிறுவனம் செய்யும் வேலையின் தரத்தை பற்றி அவர் கேள்விகளை எழுப்பியதாகவும், குறிப்பாக வீடுகளுக்கு இணைப்புகளை வழங்குவதில் ஏற்படும் தாமதம் பற்றி பேசியதாகவும் செய்திகள் வெளிவந்தன. இந்த 24x7 குடிநீர் திட்டத்திற்காக ரோடுகளை தோண்டி போட்டு மாத கணக்கில் அதை மூடாமல் உள்ளனர் என்று அவர் விமர்சித்தார்.

"தோண்டப்பட்ட சாலைகள் உடனடியாக சீரமைக்கப்படுவது இல்லை. மிகப் பெரிய தாமதம் ஏற்படுகிறது. சூயஸ் நிறுவனம் யாருக்கு கட்டுப்படும் என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. மக்கள் செல்லும் இடமெல்லாம் பிரச்சனையாக உள்ளது. மக்கள் ஒரு வேலைக்கு சென்று வருவதற்குள் படாத பாடு படுகின்றனர்," என அவர் நிருபர்களிடம் பேசுகையில் கூறினார். கோவை மாநகராட்சி அதிகாரிகளால் இதை கட்டுப்படுத்த முடியாதா என அவர் கேள்வி எழுப்பினார்.

இத்திட்டம் தாமதமாக நடைபெற்று வருவதால், பல கோடி ரூபாய்களை கொண்டு சாலைகளை புதிதாக அமைக்க முயற்சிகள் எடுத்தாலும் அந்த பணிகளை செயல்படுத்துவது சவாலாக இருப்பதாக அன்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் அதற்கடுத்த மாதத்தில் இதுவரை 2 முறை கோவை மேயர் ரங்கநாயகியே இந்த திட்டத்தில் எப்படிப்பட்ட முன்னேற்றங்கள் நடைபெற்று வருகிறது, எங்கெல்லாம் தொய்வு உள்ளது என்பதை சம்மந்தப்பட்ட சூயஸ் நிறுவனத்திடம் விசாரித்து வருகிறார்.

சென்ற மாத நிலவரப்படி இந்த 24x7 குடிநீர் திட்டம் 75% நிறைவு பெற்றுள்ளதாக தகவல் உள்ளது. அடுத்த பத்து மாதத்திற்குள் இந்த திட்டப்பணிகள் நிறைவடைந்து விடும் என்று எதிர்பார்ப்பதாக கோவை மாநகராட்சி தெரிவித்துள்து. 2019ல் துவங்கிய இந்த திட்டம் 2023 டிசம்பரில் முடிக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்துவிடுவார்களா என மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.