கணினி, தொலைக்காட்சி, ஸ்மார்ட்போன்கள் என பலதரப்பட்ட எலக்ட்ரானிக் சாதனங்களின் செயல்பாட்டுக்கு மிகவும் முக்கியமான பாகமாக செமிகண்டக்டர் சிப்-கள் உள்ளன.

உலகின் மிகப்பெரும் செமிகண்டக்டர்கள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்திற்கு, கோவை மாவட்டம் சூலூரில் இயங்கும் அமெரிக்காவை சேர்ந்த YES எனும் நிறுவனம் செமி கண்டக்டர் தயாரிக்கும் கருவியை உருவாக்கி, அதை அந்த நிறுவனத்திற்கு வெற்றிகரமாக அனுப்பி வைத்துள்ளது. இதை தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா இன்று பகிர்ந்துகொண்டார். 

இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்ட இந்த கருவி கோவையில் உருவாக்கி, ஏற்றுமதி செய்து வைத்தது நாடு முழுவதும் கவனம் பெற்று வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) செயலாளர் எஸ். கிருஷ்ணன் இது பற்றி கூறுகையில், தமிழகத்தில் இருந்து ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றம் என்பது இந்திய செமிகண்டக்டர் துறைக்கு மிக முக்கியமானது. இது தொடர்பாக மேலும் தேவைப்படும் எல்லா உதவிகளையும் வழங்க இந்திய அரசு தயாராக உள்ளது என கூறினார்.

தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறுகையில், உலகளாவிய செமிகண்டக்டர் மையமாக தமிழகம் திகழ வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு உறுதியாக உள்ளது.

இதற்காகவே 2025 தமிழ்நாடு பட்ஜெட்டில், சூலூர் மற்றும் பல்லடத்தில் செமிகண்டக்டர் இயந்திர தொழில்பூங்கா அமைக்க அறிவிப்புகள் வெளியிடப்பட்டது என அவர் கூறினார்.