'தமிழை காக்கும் தமிழ் நாட்டின் முதல்வர் அய்யா' என தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை குறிப்பிட்டு கோவை மாநகர் அவிநாசி சாலையில் அமைந்துள்ள PSG பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் பிரணவிகா எனும் சிறுமி, அண்மையில் தான் பொது மக்களுக்கு திரையரங்கில் ஒளிபரப்பப்படும் அறிவிப்பு செய்தியில் உள்ள பிழையை சுட்டிக்காட்டி, இதுபோன்று பொது அறிவிப்புகளில் தவறு இல்லாமல் இருக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
முதலமைச்சருக்கு சிறுமி பிரணவிகா கைப்பட எழுதிய கடிதத்தில், தான் கடந்த 6 ஆம் தேதி கோவை PROZONE மாலில் உள்ள திரையரங்கு ஒன்றில் அண்மையில் வெளிவந்த திரைப்படத்தை தந்தையுடன் பார்க்கச்சென்றதாகவும், அப்போது திரைப்படத்திற்கு முன்னர் 'புகைபிடித்தால் புற்றுநோய் உருவாகும் மற்றும் உயிரை கொல்லும்' என்ற எச்சரிக்கை அறிவிப்பு செய்தியில், 'கொல்லும்' எனும் வார்த்தையில் எழுத்துப்பிழை இருந்துள்ளது. அது 'கொள்ளும்' என இருந்துள்ளதை கண்டு, தனது தந்தையிடம் விளக்கம் கேட்டதாகவும், அவரும் அதில் தவறு உள்ளது என்பதை கூறியதாகவும் தெரிவித்தார்.
இதை காணும் தன்னைப்போன்ற பலரின் மனதில் எழுத்து பிழை அப்படியே பதியும் என்பதால், இதை மாற்றிடவேண்டும் எனவும் முதலமைச்சரிடம் கேட்டுக்கொண்டார். தமிழ் மீது தனக்கு உள்ள பற்றின் காரணமாக இதை முதலமைச்சரிடம் தெரிவிப்பதாக கூறினார்.
'செம்மொழியான தமிழ் மொழியை மென்மேலும் வளர்க்க' முதலமைச்சரிடம் கேட்டுக்கொண்ட சிறுமி பிரணவிகா இந்த கடிதத்தை இன்று கோவை பீளமேடு துணை அஞ்சலகத்தில் இருந்து முதலமைச்சருக்கு அனுப்பியுள்ளார்.