கோவையில் விரைவில் 160 அடி உயர முருகர் சிலை...ஏற்கனவே உலகின் மிகப்பெரிய முருகர் சிலை தமிழிகத்தில் உள்ளது! இது உங்களுக்கு தெரியுமா?
- by David
- Jan 28,2025
மிகப்பெரிய முருகர் சிலை என்றால் உடனே பலருக்கும் நினைவுக்கு வருவது மலேசியாவில் கோலா லம்பூரில் உள்ள பத்து மலையில் (Batu Caves) உள்ள முருகர் சிலை தான்.
140 அடி உயரம் கொண்ட இந்த சிலை 3 ஆண்டுகள் தொடர் உழைப்பால் 350 டன் ஸ்டீல் கொண்டு உருவாக்கப்பட்டது. 2006ல் பணிகள் முடிக்கப்பட்டு தரிசனத்துக்கு.திறக்கப்பட்டது.
இந்நிலையில் கோவை மாவட்டம் மருதமலையில் 160 அடி உயரத்துக்கு கல்லால் ஆன ஆசியாவிலேயே மிகப்பெரிய முருகன் சிலை அமைய உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு நேற்று அறிவித்தார். இதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்ய வல்லுநர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவுடன் இந்த திட்டம் நடைபெறும் எனவும் அவர் கூறினார்.
இந்த சிலை மருதமலை அடிவாரத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிலை அமைப்பதற்கான சாத்தியக்கூறு உறுதி செய்யப்பட்டதுமே, ஆசியாவிலேயே அதிக உயரம் கொண்ட முருகன் சிலையை நிறுவுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். இது முருகப்பக்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது உலகத்தின் மிக பெரிய முருகர் சிலை எங்குள்ளது?
உலகத்தின் மிக பெரிய முருகர் சிலை தற்போது தமிழ் நாட்டில் தான் உள்ளது. அதுவும் சேலத்தில் தான் இருக்கிறது. 146 அடி உயரத்தில் முத்துமலை முருகர் கோவிலில் இந்த சிலை உள்ளது.
இது 2016ல் துவங்கப்பட்டு 2022ல் முடிக்கப்பட்டது. மலேசியாவில் முருகர் சிலையை வடிவமைத்த திருவாரூர் தியாகராஜன் தான் இந்த சிலையும் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.