கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட  33வது வார்டு பகுதியான கவுண்டம்பாளையம் பகுதியிலுள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளி, மார்ட்டின் குழுமம் சார்பில் தத்தெடுக்கப்பட்டு சுமார் ரூ.7 கோடி செலவில் டிஜிட்டல் வகுப்பறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, புதிய கட்டிடங்கள்  கட்டப்பட்டுள்ளது.

413 மாணவர்கள் அங்கு படித்து வரும் நிலையில்  நவீன வசதிகளுடன் புதுப்பொலிவு பெற்ற பள்ளி கட்டிடங்கள் திறப்பு விழா இன்று நடைபெற்றது.கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிசெல்வன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மார்ட்டின் குழும இயக்குனர் லீமா ரோஸ் மார்ட்டின், நிர்வாக இயக்குனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், செயல் இயக்குனர் டைசன் மார்ட்டின், மாநகராட்சி பள்ளிகளின் முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக  புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பேசிய அமைச்சர அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அனைத்து தரப்பு மக்களும்  பாராட்டுகின்ற அளவுக்கு பள்ளி  கல்வித்துறையில் இன்றைக்கு பல்வேறு முன்னெடுப்புகளை முதல்வர் மேற்கொண்டு வருகிறார் என்றும் ஒரு படி நெல் விதைத்தால் அது 25 படியாக நமக்கு திருப்பி தருவது போல் இன்றைக்கு எந்த கல்வியை நாம் படிக்கின்றோமோ அந்த கல்வியின் பலனாக பலமடங்கு நாம் திருப்பி  பெறுகிதோம் என்றும் அந்த கல்வி நல்ல  சமுதாயத்தை தருகின்ற ஒரு கல்வியாக உள்ளது என்றும் பெருமிதம் கொண்டார்.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்  கிட்டத்தட்ட 1 கோடியே 27 லட்சம் பிள்ளைகள்  படிப்பதாகவும் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாட்டு முதலமைச்சர் நமக்கான நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி எனும் திட்டத்துக்காக  தன்னுடைய சொந்த நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் கொடுத்து துவக்கி வைத்ததாகவும் அது இன்று பல கோடிகளை தாண்டி செல்கிறது என்றும் கூறினார்.

கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் பேராசிரியர் அன்பழகனார் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 14 ஆயிரத்து 109 வகுப்பறைகளை கட்டி கொடுத்துள்ளதாகவும்  இன்னும் 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டி கொடுக்க உள்ளோம் என்றும் கூறியதுடன், முதலமைச்சர்  தன்னுடைய இரு கண்களாக கல்வியையும்,  சுகாதாரத்தையும் நான் பார்க்கிறேன் என்பார் எனவும்  அந்த வகையில் பள்ளி கல்வி துறையில் ஒரு நல்ல ஒரு கட்டமைப்பை நாம் இன்றைக்கு உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும் பள்ளி கல்வித் துறை சார்பில் வகுப்பறை  மேம்பாட்டுக்காக ரூ.455 கோடி ஒதுக்கி உள்ளதாகவும் கோவை மாவட்டத்தில் மட்டும் 316 பள்ளிக்கூடங்களில் ரூ.30 கோடியே 89 லட்சம் செலவில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.