சென்ற ஆண்டு மார்ச் 8ம் தேதி அன்று கோவை மாநகராட்சியின் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிவிப்புகள் வெளியானது.

அப்போது அதில் ரூ. 1.92 கோடி மதிப்பில் கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் உள்ள வார்டு எண் 70க்குட்பட்ட சீதாலட்சுமி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக டயாலிஸிஸ் பிரிவு துவங்க பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு இடம்பெற்றது.

இந்த நிதியாண்டு (2025-26)க்கான பட்ஜெட் வெளியானபோது, கோயம்புத்தூர் மாநகராட்சியின் சீதாலட்சுமி நகர்புற ஆரம்ப சுகாதார வளாகத்தில் 3000 சதுரடி கட்டிடத்தில் Rotary Coimbatore Ikon Trust மற்றும் Tamilnadu Kidney Research Foundation இணைந்து சிறுநீரக டயாலிசிஸ் மையம் செயல்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அறிவிக்கப்பட்டது.

மேலும் இதற்கு கோயம்புத்தூர் மாநகராட்சியிலிருந்து கட்டிடம் மற்றும் மின்சார கட்டண உத்தேச செலவினத் தொகை ரூ.62 லட்சம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் தற்போது சீதாலட்சுமி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக டயாலிஸிஸ் மையம் மற்றும் சிறப்பு மகப்பேறு மருத்துவ சிகிச்சை மையம் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

தமிழகத்திலேயே சென்னை மாநகராட்சிக்கு அடுத்து கோவை மாநகராட்சி சார்பில் தான் இப்படியொரு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டு நிறைவேறுவதற்குள் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் இந்த சேவை தேவைப்படும் எளிய மக்கள் பலரும் பயனடைவார்கள்.