இருக்கைகள் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகரிக்காததே கோவை - துபாய் இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படாததற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என தகவல்கள் கூறுகின்றன.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் தொழித்துறையினர் சார்பிலும் பயணிகள் சார்பிலும்கோவையிலிருந்து துபாய்க்கு நேரடி விமான சேவை தொடங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அண்மையில் கூட இது பற்றி இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கவனத்தை பெற சமூக வலைத்தளங்கள் மூலமாக #CoimbatoreneedsDXBflights எனும் பிரச்சாரம் கோவையிலிருந்து மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இதுவரை துபாய்க்கு நேரடி விமான சேவை தொடங்கப்படவில்லை.
இது பற்றி விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
இந்தியாவில் இருந்து துபாய்க்கு வாரந்தோறும் 65,000 வீதம் 1,30,000 இருக்கைகள் (வருகை, புறப்பாடு சேர்த்து) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கேற்ப அதிக வரவேற்பு உள்ள விமான நிலையங்களில் இருந்து துபாய்க்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.
கோவை-துபாய் இடையே விமான சேவை தொடங்க (பைலேட்ரல் ஒப்பந்தம்) கடந்த 2006-2008-ம் ஆண்டு காலகட்டத்தில் கையெழுத்தாகியுள்ளது. கோவையில் இருந்து சிங்கப்பூர், ஷார்ஜா, இலங்கை மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்களை இயக்கலாம்.
கோவை-துபாய் இடையே விமான சேவை தொடங்க தொழில் அமைப்பு நிர்வாகிகள் முதலில் விமான சேவை தொடங்கினால் லாபகரமாக இயக்கலாம் என்பதை அந்நாட்டு விமான நிறுவனத்துக்கு புரிய வைக்க வேண்டும். மறுபுறம் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வேறு விமான நிலையங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள துபாய் நாட்டுக்கான இருக்கைகளின் எண்ணிக்கையை குறைத்து கோவைக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இல்லையெனில் இந்தியாவிலிருந்து துபாய்க்கு வாரந்தோறும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இருக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அப்போது மட்டுமே கோவை -துபாய் இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.