கோவை சூலூர் பகுதியில் ரூ.260 கோடி மதிப்பீட்டில் ராணுவ தொழிற்பூங்கா அமைக்க 'தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம்' அனுமதி வழங்கியதை அடுத்து வரும் நவம்பர் மாதத்தில் இருந்து விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி வளாகங்களை வரப்பட்டியில் உள்ள இந்த பூங்கா பகுதியில் அமைக்க நிலங்களை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (TIDCO) ஒதுக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கோவை மாவட்டத்தில் சூலூர் தாலுகாவில் உள்ள வரப்பட்டி கிராமத்தில் சுமார் 364.20 ஏக்கர் பரப்பளவில் TIDCO மற்றும் தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டு கழகம் (SIPCOT) சார்பில் பாதுகாப்பு துறைக்கான பிரேத்தியேக தொழில்பூங்காவை அமைப்பதற்கு சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்த ஒப்புதலை பெற மாநில சுற்றுசூழல் தாக்கம் மதிப்பீட்டு ஆணையத்தினிடம் SIPCOT தரப்பில் கடந்த ஏப்ரல் மாதம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது.

SIPCOT மேலாண்மை இயக்குனர் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த விண்ணப்பத்திற்கு அண்மையில் அனுமதி கிடைத்தது. இதையடுத்து இந்த பூங்கா கட்டமைக்கும் பணிகள் துவங்கும் எனவும், இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் துவங்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்ட நிலையில் இப்போது இந்த தொழில் பூங்கா குறித்து வெளிவரும் தகவல்கள் வரவேற்பை பெற்று வருகின்றன.

மொத்தம் 364.20 ஏக்கர் நிலம் சூலூர் வரப்பட்டி பகுதியில் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதில் 260 ஏக்கர் நிலம் விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை சார்ந்த நிறுவனங்கள் உற்பத்தி வளாகங்களை உருவாக்கிக் கொள்ள ஒதுக்கப்பட உள்ளது. மீதமுள்ள நிலங்கள் பொது கட்டமைப்பு மற்றும் வசதிகள் உருவாக்கிக் கொள்ள பயன்படுத்தப்பட உள்ளது.

கோவை மாவட்டத்தில் 150 க்கும் அதிகமான சிறு நடுத்தர நிறுவனங்கள் பாதுகாப்புத் துறைக்கு தேவையான பாகங்களை உற்பத்தி செய்வதிலும் சேவைகளை வழங்குவதிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பூங்கா அமைவதால் இவர்கள் மட்டுமல்லாது கோவை மாவட்டத்தில் உள்ள 1 லட்சத்திற்கும் அதிகமான சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு புது வாய்ப்புகள் உருவாக்ககும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் சூலூர் இந்திய விமான படை நிலையத்திற்கு அருகே மற்றும் ஒரு விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைக்கான தொழில் பூங்கா அமைக்க TIDCO திட்டமிட்டு வருகிறது. இந்தப் பூங்கா 197 ஏக்கர் நிலத்தில் அமையும்.

இதற்கு தேவையான நிலத்தை கோவை மாவட்டத்தின் கீழ் வரும் 3 கிராமங்களில் இருந்தும் திருப்பூர் மாவட்டத்தின் கீழ் வரும் 1 கிராமத்தில் இருந்தும் எடுக்க விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிய வருகிறது.

அட்டைப்படம்: விளக்கத்திற்காக மட்டும்.