கோவை மாநகருக்கு தமிழக அரசு தரப்பில் திட்டங்கள் பல அறிவிக்கப்பட்டு அவை பெரும் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகரில் நடைபெற்று வரும் பல திட்டங்கள் செயல்படுத்தப்படும் களத்திற்கு இன்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்த் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

இந்த ஆய்வின் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் காந்திபுரம் அனுப்பர்பாளையம் பகுதியில் ரூ.300.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் கட்டுமானப்பணிகளை மாநகராட்சி ஆணையளர் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலையில்,  அவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது இந்த திட்டப்பணியில் இதுவரை நடைபெற்றுள்ள முன்னேற்றங்கள் பற்றி மாவட்ட கண்காணிப்பு அலுவலரிடம் விளக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது துணை ஆணையாளர் அ.சுல்தானா, த.குமரேசன், மாநகர தலைமை பொறியாளர்(பொ)முருகேசன், உதவி ஆணையாளர் செந்தில்குமரன், முத்துசாமி, உதவி நகர்நல அலுவலர் பூபதி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ் ஆகியோர் இருந்தனர்.

இதே போல கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் முதற்கட்டமாசு சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.167.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் செம்மொழிப்பூங்கா கட்டுமானப்பணிகளை; கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.26க்குட்பட்ட முல்லை நகர் பகுதியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார பணிகள் திட்டத்தின் கீழ் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் ஆதரவற்றோர்களுக்கான இரவு தங்கும் விடுதி கட்டப்பட்டு வருவதை; காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகில் ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தினை; கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.25க்குட்பட்ட காந்திமாநகர் பகுதியில் ஒண்டிப்புதூர், பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் கழிவுநீர் உந்து நிலையம் கட்டுமானப்பணியினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

மேலும் விரைவில் சீரமைக்கப்படவுள்ள கோயம்புத்தூர் மாநகராட்சி காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் நவீன முறையில் சீரமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.