கோயம்புத்தூர் மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நீர் பாதுகாப்பில் சிறப்பாக செயல்படுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்க உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது :- 

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பினை அமைத்து நவீன தொழில்நுட்பத்துடன் முறையாக பராமரித்து, மறுசுழற்சி முறையில் மழைநீரை பயன்படுத்துபவர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட வளாகங்களில் மழைநீரை சேகரித்து நிலத்தடி நீரை உயர்த்துபவர்கள், நீர் பாதுகாப்பில் சிறப்பாக செயல்படுகின்றவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், நீர் மேலாண்மையில் அனைவரையும் ஈடுபடுத்தும் நோக்கத்துடன் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் உள்ளிட்ட சங்கங்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கவுள்ளது.

எனவே, நீர் பாதுகாப்பில் சிறப்பாக செயல்படுபவர்களின் விவரங்கள் மற்றும் புகைப்படங்களை மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடு 8925975980, 8925975981, 8925975982, 8925840945, 9043066114 ஆகிய எண்களுக்கு அனுப்பி வைக்குமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.