கஞ்சா, மெத்தபெட்டமைன் விற்பனைக்கு வைத்திருந்த கும்பல் சிக்கியது

கோவை, மதுக்கரை காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுக்கரை காவல் நிலைய காவல் துறையினர் பாலத்துறை சந்திப்பு அருகே சென்று  வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது  கஞ்சாவை விற்பனைக்காக வைத்து இருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த கிரண் (28), நபில்(30), கோவை பகுதி சேர்ந்த ஜெயக்குமார் (30), அப்துல் நாசர் (36) , ஷாஜகான் (28) மற்றும் சாதிக் பாஷா (29) ஆகிய 6 இளைஞர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் 8 ¾ கிலோ கஞ்சா, 10 கிராம் மெத்தபெட்டமைன் (METHAMPHETAMINE), கார், ஆட்டோ , இரண்டு சக்கர வாகனம் மற்றும் செல்போன் 7 ஆகியவற்றை பறிமுதல் செய்து அந்த நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

ஏன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார் 87 வயது மூதாட்டி?

கோவையில் 87 வயது மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவை செல்வபுரம் எல்ஐசி காலனி சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் கனகா(87). இவர் தனது மகன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 27ம் தேதி கனகா தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது வயது மூப்பின் காரணமாக உடல் நல பாதிப்பால் தற்கொலை செய்து கொண்டாரா? வேறு காரணமா? என செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செல்வபுரத்தில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

கோவை செல்வபுரம் போலீசார் அசோக்நகர் ரவுண்டானா அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகம்படும் படி நின்றிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். சோதனை செய்தபோது இருவரும் போதை மாத்திரை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனைடுத்து போலீசார் போதை மாத்திரை விற்ற செல்வபுரம் தெற்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த நுபாலி(24), பிரகதீஷ்(24) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 போதை மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டது.

இப்படியுமா செல்போன் திருடுவாங்க?

கோவையில் அவசரம் என வாங்கி செல்போன் பேசுவதுபோல் நடித்து திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். 

கோவை போத்தனூர் கணேசபுரம் விட்டல் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார்(42). இவர் நேற்று முன்தினம் வீட்டு முன்பு செல்போன் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரே பைக்கில் 3 பேர் வந்தனர். அதில் ஒருவர் அவசரமாக பேச வேண்டும், உங்களது செல்போனை கொடுத்தால் பேசிவிட்டு தருவதாக கூறினார். இதனை நம்பிய ராஜ்குமார் அவரிடம் செல்போனை கொடுத்தார்.

சிறிது நேரம் பேசுவது போல நடித்த அந்த வாலிபர் திடீரென பைக்கில் ஏறி 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் இது குறித்து சுந்தராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பேசுவது போல் நடித்து செல்போனுடன் ஓடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி பஸ்சில் நகை பறிப்பு

கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் கண்ணம்மாள்(63). இவர் கடந்த 27ம் தேதி பஸ்சில் காந்திபுரத்தில் இருந்து ரத்தினபுரி சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் நைசாக கண்ணம்மாள் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி சென்றார்.

பஸ் 100 அடி ரோட்டில் உள்ள ஒரு காம்ப்ளக்ஸ் அருகே நிறுத்தத்தில் நிற்கும்போது கண்ணம்மாள் தனது கழுத்தில் கிடந்த தங்க செயின் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் இது குறித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடனை தேடி வருகின்றனர்.