கோவை கிரைம் செய்திகள் - 8.3.25
- by CC Web Desk
- Mar 08,2025
சரவணம்பட்டியில் சாமி நகைகள் கொள்ளை!
சரவணம்பட்டி அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரம், சத்தி ரோட்டில் ஸ்ரீ சிறுவர் பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு பூசாரியாக மணி என்பவர் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று பூசாரி மணி பூஜைகள் முடிந்ததும் கோவில் கதவை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் இரவில் அடையாளம் தெரியாத நபர் கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்து, கோவில் கருவறைக்குள் சென்று அங்கு சாமி கழுத்தில் கிடந்த நகைகளை திருடிவிட்டு சென்றுள்ளார். மறுநாள் கோவிலுக்கு வழக்கம் போல பூசாரி மணி சென்று உள்ளார். அன்றைய தினத்திற்கான பூஜைக்கு ஏற்பாடு செய்த போது சாமி கழுத்தில் கிடந்த தங்க நகை காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து உடனடியாக கோவில் நிர்வாகி மருதாச்சலத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவம் குறித்து அறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் கோவில் முன்பு திரண்டனர். இது குறித்து மருதாச்சலம் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்கள் அங்கு சென்று கைரேகைகளை பதிவு செய்தனர். கோவில் சாமி கழுத்தில் கிடந்த நகைகளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
நகை திருடிய வைத்தியரை பொறிவைத்து பிடித்த போலீசார்
கோவை, குனியமுத்தூர், அருகே உள்ள பி.கே. புதூர், பால அவன்யூ பகுதியைச் சேர்ந்தவர் லூயிஸ் குழந்தை ராஜ் ( வயது 68). இவர் வெளிநாட்டில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது மனைவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் லூயிஸ் வெளிநாட்டிலிருந்து மனைவிக்கு சிகிச்சை அளிப்பதற்காக விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.
அப்போது அவரது மனைவிக்கு வீட்டில் வைத்து நாட்டு வைத்தியர் மூலம் சிகிச்சை அளித்தார். மேலும் மனைவிக்கு உதவியாக அழகு சாந்தி என்ற வேலைக்கார பெண்ணையும் லூயிஸ் குழந்தை ராஜ் வீட்டில் நியமித்து இருந்தார்.
நாட்டு வைத்தியர் முருகன் வீட்டிற்கு வந்து தங்கியிருந்து ஒரு வாரம் வரை அவரது மனைவிக்கு சிகிச்சை அளித்துவிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லூயிஸ் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 16 பவுன் தங்க நகை மற்றும் ரூ.3,000 ரொக்க பணம் ஆகியவை திடீரென காணாமல் போனது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல இடங்களில் தேடினார். வீட்டிற்கு வந்து சென்றவர்களிடமும் விசாரித்தார். ஆனால் தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் லூயிஸ் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் கஸ்தூரி மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டு வேலைக்கார பெண் அழகு சாந்தியிடம் விசாரித்த போது சிகிச்சை அளிக்க வந்த நாட்டு வைத்தியர் முருகன் (வயது 46) நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கையும் களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர்.
ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் செயின் திருட்டு
மதுரை அருகே உள்ள வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 26). இவர் கோவையில் மருத்துவ படிப்பு தொடர்பாக ராமநாதபுரம் பகுதியில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி வருகிறார்.
தினமும் பஸ்ஸில் சுங்கம் பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ் ஏறி படிப்பதற்காக சென்று வருவார். சம்பவத்தன்று சுங்கம் பஸ் நிறுத்தத்தில் இருந்து அரசு பஸ்ஸில் ஏறி ரெயின்போ பஸ் நிறுத்தத்தில் இறங்கிய போது அவர் கழுத்தில் கிடந்த 1 1/2 பவுன் தங்க செயின் மாயமாகி இருந்தது.
அவர் அருகில் நின்று பயணம் செய்த பயணி தங்க சங்கிலியை திருடியிருக்கலாமென கூறப்படுகிறது. இது குறித்து மகேஸ்வரி கோவை ரேஸ் கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்கு பதிவு செய்து பஸ்ஸில் இளம் பெண்ணிடம் செயினைபறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்.