நள்ளிரவில் வீட்டிற்கு தெரியாமல் பைக் ஒட்டிய சிறுவர்கள் கார் மோதி மரணம்!

கோவை, சரவணம்பட்டியில் உள்ள 'தந்தை பெரியார்' நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது இளைய மகன் லோகேஷ் (17). இவர் அவரது அண்ணனுடன் சேர்ந்து பந்தல் போடும் தொழில் செய்து வந்தார். நேற்று லோகேஷின் நண்பருக்கு பிறந்தநாள் ஆகும். 

இதையொட்டி நண்பனின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவரது அண்ணனிடம் லோகேஷ் மோட்டார் சைக்கிளை தரும்படி கேட்டார். ஆனால் இரவு நேரம் என்பதால் லோகேஷின் அண்ணன் அவருக்கு மோட்டார் கிளை கொடுக்கவில்லை.

இதனால் அவர் தூக்கிய பிறகு அவருக்கு தெரியாமல் லோகேஷ் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி இரவில் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு பிள்ளையார் கோவில் வீதி பகுதியைச் சேர்ந்த தன் நண்பன் பிரசன்னா (15) என்பவருடன் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு புறப்பட்டார்.

இரவு 12.15 மணிக்கு மோட்டார் சைக்கிள் சரவணம்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உயிருக்கு போராடியவர்கள் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்து குறித்து அறிந்ததும் போக்குவரத்து விபத்து தடுப்பு மற்றும்புலனாய்வு போலீசார் விரைந்து சென்றனர். விபத்தில் இறந்தவர்கள் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய காரை போலீசார் தேடி வருகிறார்கள்.

போலீசில் புகார் கொடுப்பதாக இளைஞரை சந்தேகித்து தாக்கிய கும்பல் ! 

கோவை, ஆர் எஸ் புரம் அருகே உள்ள எஸ் .என். பாளையம், வி.ஓ சி தெருவை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் கார்த்திக் (31). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர் தர்மராஜ். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னை தாக்கியதாக சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த திலோத்தமன் உள்ளிட்டவர்கள் மீது தர்மராஜ் தரப்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பிறகு அந்த வழக்கில் திலோத்தமன் மற்றும் நண்பர்கள் கைதாகி ஜாமினில் விடுதலை ஆகினர். 

இந்த நிலையில் தங்களைப் பற்றி போலீசுக்கு தகவல் கொடுப்பதாக திலோத்தமன் மற்றும் அவரது நண்பர் பிரகாஷ் உள்ளிட்டவர்கள் அவர் மீது சந்தேகப்பட்டு உள்ளனர். சம்பவத்தன்று இது தொடர்பாக தர்மராஜன் நண்பரான கார்த்திக், வி.ஓ.சி. தெருவில் வந்த போது அவரை வழிமறித்து தகராறு செய்து இரும்பு கம்பி மற்றும் கற்களால் தாக்கினர். இதில் காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 

இந்த சம்பவம் குறித்து கார்த்தி ஆர்.எஸ். புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சீரநாயக்கன்பாளையம் எம். ஜி .ஆர் .நகர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 28), பாலாஜி கார்டன் திலோத்தமன், (வயது 22), அண்ணா தெருசக்திவேல் (21), ஆறுமுகம் தெரு ஜெயக்குமார் ( வயது 27) மற்றும் பி. என். புதூர் பகுதியைச் சேர்ந்த சிவா விக்னேஷ் (வயது 28) ஆகியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வாகனத்தில் சென்றவரை புதருக்குள் இழுத்து சென்று ஜி-பே செய்ய சொல்லி தாக்கிய திருடர்கள்!

கோவை, மதுக்கரை அருகே உள்ள கருமாண்டம்பாளையம் ரோடு அன்னை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் பிரபு (வயது 24).இவர் கோவை அவிநாசி ரோட்டில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலையில் மதுகரையில் உள்ள அவரது நண்பரை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார். மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் அருகில் பிரபு சென்றபோது திடீரென அவரது மோட்டார் சைக்கிளை 2 வாலிபர்கள் மரித்தனர். அவரை தாக்கி அருகில் உள்ள புதர் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். 

ஆள் நடமாட்டம் இல்லாத அந்த பகுதியில் வைத்து அவரை தாக்கிய வாலிபர்கள் அவரிடம் பணத்தை தருமாறு கேட்டனர். அவர் இல்லை என்று கூறியதால் கத்தியால் அவரை குத்தினர். இதில் பிரபுவிற்கு தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டது. அவர் வலியால் அலறினார். 

அதன் பிறகு அந்த வாலிபர்கள் அவரிடம் இருந்து செல்போனை பறித்து கூகுள் பே மூலம் ரூ.23,980 பணத்தை அவர்கள் கணக்கிற்கு அனுப்பி கொண்டனர். அதன் பிறகு அவரை மிரட்டி விட்டு அங்கிருந்து 2 பேரும் தப்பிச் சென்று விட்டனர்.

அதன் பிறகு அங்கிருந்து தப்பி வந்த பிரபு நடந்த சம்பவம் குறித்து சுந்தராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வினோத்குமார் மற்றும் போலீசார் பிரபுவை தாக்கி வழிப்பறி செய்த வாலிபர்கள் யார் என விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கோண வாய்க்கால் பாளையம் பன்னி கடை 2வது தெருவை சேர்ந்த நித்திஷ் ( 21), சரவணம்பட்டி அருகே உள்ள கீரணம் புதூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கௌதீஸ்வரன் ( 22) என தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.