கோவையில் கத்தியை காட்டி மிரட்டி பணம்பறித்த 21 வயது இளைஞன் கைது!

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூரை பிரிவை சேர்ந்தவர் செந்தில்குமார்(42). இவர் நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர் மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க சென்றார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டி விட்டு அந்த வாலிபர் தப்பினார். இது குறித்து செந்தில்குமார் சாயிபாபா காலனி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், பணம் கேட்டு மிரட்டியது கோவை வெங்கிடாபுரம் புவனேஷ்வரி நகரை சேர்ந்த ஹரிஹரன்(21) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

ஓசியில் ஆம்லெட் தரமறுத்த ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்; 2 பேர் கைது

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (46). இவர் சரவணம்பட்டியில் குடும்பத்துடன் தங்கி துடியலூர் ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இவர், ஓட்டலில் இருந்தபோது 2 பேர் வந்து 4 சிக்கன் ரைஸ் மற்றும் 8 ஆம்லெட் வாங்கி சென்றனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அங்கு வந்த அதே 2 பேர் தாங்கள் வாங்கி சென்ற சிக்கன் ரைசில் பூச்சி கிடந்தது. எனவே அதற்கு ஈடாக 10 பிரியாணி பொட்டலம் கேட்டனர். இதனையடுத்து ராமச்சந்திரன் அவர்களிடம் 10 பிரியாணி பொட்டலம் கொடுத்தார்.

அதனை பெற்றுக்கொண்ட இருவரும் மீண்டும் தங்களுக்கு சிக்கன் மற்றும் ஆம்லெட் தருமாறு கேட்டனர். இதற்கு மறுப்பு தெரிவித்த ராமச்சந்திரனிடம் இருவரும் தகராறு செய்தனர். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த இருவரும் தகாத வார்த்தைகளால் பேசி ராமச்சந்திரனை உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதனைத்தடுக்க முயன்ற ராமச்சந்திரனின் சகோதரரையும் தாக்கினர்.

பின்னர் அவர்களை மிரட்டிவிட்டு இருவரும் காரில் தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், ஓட்டல் உரிமையாளரை தாக்கியது ராமநாதபுரம் கமுதியை சேர்ந்த சக்திவேல்(23), துடியலூரை சேர்ந்த பஹீம்அஹமத் (24) என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கோவையில் வீடு புகுந்து உண்டியலை உடைத்து ரூ. 40 ஆயிரம் திருட்டு

கோவை வேலாண்டிபாளையம் ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் அபிநந்தன் குமார்(25). இவர் தனது சகோதரர் மற்றும் நண்பர்கள் 4 பேருடன் அறை எடுத்து தங்கி கட்டிட வேலைக்கு சென்று வருகிறார்.

அபிநந்தன் குமார் தான் வாங்கும் சம்பளத்தை உண்டியலில் போட்டு சேமித்து வைப்பது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் அபிநந்தன் குமார் உள்ளிட்ட அனைவரும் வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் வேலை முடிந்து மாலையில் வீட்டுக்கு வந்தனர். அப்போது அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த ரூ. 40 ஆயிரம் மற்றும் அபிநந்தன் குமாரின் சகோதரரின் செல்போன் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடன் வேலை பார்க்கும் யாராவது திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து அபிநந்தன் குமார் சாயிபாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை உடைத்து ரூ. 40 ஆயிரம் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

குட்கா பதுக்கி விற்றவர் கைது; 60 கிலோ பறிமுதல்

கோவை சங்கனூர் மெயின்ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் குட்கா பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ரத்தினபுரி போலீசார் நேற்று அந்த வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். விசாரணையில், குட்காவை விற்பனைக்காக பதுக்கியவர் சங்கனூர் மெயின்ரோடு நல்லாம்பாளையத்தை சேர்ந்த முருகானந்தம்(47) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 60 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

100 கிலோ இரும்பு கம்பிகளை களவாடிய 3 பேர் கைது

கோவை போத்தனூர் சீனிவாசன் நகரை சேர்ந்தவர் வாசுதேவ்(42). இவர், அங்குள்ள ரங்கநாதபுரத்தில் புதிய வீடு கட்டி வருகிறார். இதன் கட்டுமான பணிக்காக வீடு முன் இரும்பு கம்பிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த 16ம் தேதி இரவு அங்கு வந்த மர்ம நபர்கள் 100 கிலோ இரும்பு கம்பிகளை சரக்கு வாகனத்தில் ஏற்றி திருடி சென்றனர்.

இதுகுறித்து வாசுதேவ் சுந்தராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் இரும்பு கம்பிகளை திருடியது குனியமுத்தூர் செந்தமிழ் நகரை சேர்ந்த அஜித்குமார் (24), குனியமுத்தூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அப்துல் சமது (26) மற்றும் குனியமுத்தூர் மேட்டுக்காட்டை சேர்ந்த ஆறுமுகவேல்(28) என்பது தெரியவந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரும்பு கம்பி, சரக்கு வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஈரோட்டில் ஆண் வெட்டப்பட்ட சம்பவம் : துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட 3 நபர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்ப்பு

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜான் (35) என்கிற சாணக்கியன். இவரது மனைவி சரண்யா (32). ஜான் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி.

இந்நிலையில் இன்று மதியம் ஈரோடு மாவட்டம் வழியே பாயும் சேலம் - கோவை நெடுஞ்சாலையில் ஜான் தனது மனைவியுடன் மாருதி காரில் சென்றுகொண்டிருந்தார். ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே கார் வந்தபோது, அவர்களது காரை பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் ஜான் சென்ற காரை பின்னால் இருந்து இடித்துள்ளது.

ஜான் தனது காரை நிறுத்தியதும், பின்னால் இருந்த காரில் வந்த மர்ம நபர்கள், காரை விட்டு இறங்கி ஜானை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அந்த வழியே சென்ற ஒருவர் படம்பிடித்துளார். ஜான் வெட்டப்படுவதும், அவரின் மனைவி அந்த கும்பலிடம் கெஞ்சுவதும் காட்சியாகி உள்ளது. ஜானை கொன்றுவிட்டு அந்த மர்ம கும்பல் மற்றொரு காரில் ஏறி தப்பி சென்றது.

தகவல் அறிந்ததும் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ஜவகர் நேரில் சென்று பார்வையிட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்த ஜான் மீது 2 கொலை வழக்கு உட்பட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது என தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை போலீசார் காலில் சுட்டு பிடித்துள்ளனர். சுட்டு பிடிபட்ட நபர்கள் புதன்கிழமை அன்று சிகிச்சைக்காக போலீசார் பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.