தன்னுடன் பேச மறுத்த திருமணம் ஆன பெண்ணை மிரட்டிய நபர் கைது!

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் கே.பி.ஆர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதான ரீட்டா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). கோவை, ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரீட்டா தற்போது செவிலியராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த சில வருடத்திற்கு முன்பு கோவை டவுன்ஹாலில் உள்ள துணிக் கடையில் அவர் வேலை பார்த்தார். அப்போது உக்கடம் அன்பு நகர் 3 வது தெருவை சேர்ந்த, முகமது தனிஷ் (வயது 25) என்பவர் பழக்கமானார். இவர் செங்கல் சூலையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் சில நாட்கள் கழித்த பிறகு தான் முகமது தனிஷுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது, கலாவுக்கு தெரியவந்தது. இதனால் முகமது தனிஷ் உடன் பழகுவதை  நிறுத்திக் கொண்டார். பேசுவதையும் தவிர்த்தார். அவரின் இந்த மாற்றம் முகமது தனி ஷுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் பிறகு ரீட்டாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் முகமது தனிஷ் ரீட்டாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேச முயன்று உள்ளார். ஆனால் ரீட்டா அவரிடம் பேசுவதை தவிர்த்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த  முகமது தனிஷுக்கு அவரையும் அவரது குடும்பத்தினரையும் பெட்ரோல் பாட்டில் வெடிகுண்டு வீசி எரித்து விடுவதாக கூறி உள்ளார்.

இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில் நேற்று  ரீட்டா அவரது கணவருடன் கே.பி.ஆர் காலனி அருகில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த முகமது தனிஷ், ரீட்டாவின் கணவரை தாக்கி கீழே தள்ளி விட்டு உள்ளார்.

இதில் அவர் காயம் அடைந்தார்.இதனால் அதிர்ச்சி அடைந்த ரீட்டா குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து முகமது தனிஷை கைது செய்தனர். அதன் பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ரூ.35 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்!

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் காட்டூர் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கிட சந்தேகத்துக்குரிய வகையில் ஒருவர் நின்று கொண்டு இருந்துள்ளார். இதையடுத்து அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர்.

அதில் ரூ.35 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்தது. பணத்திற்கான போதிய ஆதாரம் இல்லாததால் காட்டூர் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அந்த நபரை விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த சத்தியவான்(43) என்பதும், இவர் கோவையில் இருந்து கேரளாவிற்கு பணத்தை கடத்தி சென்றதும் தெரியவந்தது.பணத்திற்கான ஆவணங்கள் இல்லாததால் காட்டூர் போலீசார் வருமான வரித்துறை அதிகாரி மதி ஆனந்த்திடம் இந்த பணத்தை ஒப்படைத்து உள்ளனர். தொடர்ந்து ஹவாலா பணத்தை எடுத்து வந்த நபரிடம் காட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருட்டு வழக்கில் கைதான நபர் மீது பாய்ந்தது குண்டாஸ் 

கோவை சொக்கம்புதூரை சேர்ந்தவர் ராகேஷ்(எ) தீனா(26). இவரை திருட்டு வழக்கில் சிங்காநல்லூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சிங்காநல்லூர் காவல் துறையினர் போலீஸ் கமிஷனரிடம் பரிந்துரை செய்தனர். இதனையடுத்து திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ராகேசை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் நேற்று உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை போலீசார் சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

முன்விரோதத்தால் முன்னாள் நண்பரை தாக்கிய நபர் கைது

கோவை தெற்கு உக்கடம் அன்பு நகரை சேர்ந்தவர் உமர் முக்தார் (33). இவரது நண்பர் அல் அமின் காலனி முதல் வீதியை சேர்ந்த அன்சர் (31). இவர்களுக்கு இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் 22ம் தேதி உமர் முக்தார் வின்சென்ட் ரோட்டில் நடந்து வந்தார். அப்போது அங்கு வந்த அன்சர் திடீரென அவரை தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டார்.

இதில் ஆத்திரம் அடைந்த அன்சர் அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து உமர் முக்தாரை சரமாரியாக தாக்கினார். பின்னர் மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார். பலத்த காயம் அடைந்த உமர் முக்தாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து உமர் முக்தார் உக்கடம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு வழக்குப்பதிவு செய்து அன்சரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கம்மி காசுக்கு செருப்பு கிடைக்காததால் கடைக்காரை தாக்கிய நபர்! 

கோவை குறிச்சி பிரிவை சேர்ந்தவர் முபாரக் (38). இவர் வெரைட்டி ஹால் ரோடு அடுத்த என்.எச். ரோடு பகுதியில் உள்ள செருப்பு கடையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் அவரது கடைக்கு ஒருவர் செருப்பு வாங்க வந்தார்.

அவர் ஒரு செருப்பை எடுத்து அதற்கு விலையை குறைத்து தரும்படி கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர், முபாரக்கை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இது குறித்து முபாரக் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செருப்பு வாங்க வந்து முபாரக்கை தாக்கிய மதுக்கரையை சேர்ந்த யாகூப் கான் (45) என்பவரை கைது செய்தனர்.