(இன்று கோவையில் நடைபெற்ற கிரைம் செய்திகள் தொகுப்பாக இந்த கட்டுரையில் பதிவு செய்யப்படும். புதிதாக வெளிவரும் குற்ற சம்பவம் குறித்த தகவல்கள் இதில் தொடர்ச்சியாக சேர்க்கப்படும்)

 

தனியார் கல்லூரியின் சீனியர் மாணவரை தாக்கிய ஜூனியர்கள் 13 பேர் இடைநீக்கம்

 

கோவை மாவட்டம் காளியாபுரம் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள மிக பிரபலமான தேசிய தலைவர் ஒருவரின் பெயரை கொண்ட தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் 13 மாணவர்கள் அந்த கல்வி குழுமத்தின் மற்றொரு கல்லூரியில் எம். ஏ.பயிலும் சீனியர் மாணவரை தங்கள் விடுதி அறையில் வைத்து துன்புறுத்திய வீடியோ இன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

 

முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களின் அறையில் இருந்த பணத்தை சீனியர் மாணவர் திருடியதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளார். பணத்தை திருடியதற்காக அவரை ஜூனியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.  

அவர்கள் தங்கள் விடுதி அறையில் வைத்து அந்த மாணவரை மிகவும் பலமாக அடித்துள்ளனர். அவரின் இடது கையில் பாதிப்பு அதிகமாக இருப்பதும், அவர் வலியில் கதருவதும் இன்று காலை சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவில் வெளிப்படையாக தெரிகிறது. 

 

இந்த சம்பவம் கல்லூரி நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர் கல்லூரியின் முதல்வர் சிவராஜா, இந்த சம்பவம் தொடர்பாக 13 முதலாம் ஆண்டு மாணவர்களை இடைநீக்கம் செய்துள்ளார். மேலும் இந்த 13 மாணவர்கள் கல்லூரி நிர்வாகம் நாளை நடத்த உள்ள விசாரணையில் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மதுக்கரை பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் கடைகள், பயணிகளிடம் போதைப்பொருட்கள் சோதனை

 

கோவை மாவட்டத்தில் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவல்துறையினர் பல்வேறு பெட்டிக்கடைகள் மளிகை கடைகளில் சோதனை மேற்கொண்டு போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் அதனை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவணசுந்தர் உத்தரவின் பேரில் கோவை மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் சோதனையானது மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் காட்டூர் காவல் நிலைய போலீசார் 40க்கும் மேற்பட்டோர் இன்று சோதனை மேற்கொண்டனர். 

பேருந்து நிலையத்தில் செயல்படும் கடைகளிலும் பொது மக்களிடமும் பயணிகளிடமும் சோதனையானது மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர்களது உடமைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டது.

 

சோதனையின் போது குட்கா போன்ற போதை பொருட்கள் கிடைக்கபெற்ற நிலையில் அவற்றை பறிமுதல் செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.