கோவை கிரைம் செய்திகள் - 18.2.25
- by CC Web Desk
- Feb 18,2025
வெறி நாய்களுக்கு விஷம் வைத்த குடியிருப்பு வாசிகள்
கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள லூனா நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சுற்றித் திரியும் வெறி நாய்கள் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் தனியாக நடந்து செல்லும் நபர்களைத் துரத்தியும், கடித்தும் அச்சுறுத்தி வந்தன.
இதனால் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் 15க்கும் மேற்பட்ட வெறி நாய்களுக்கு விஷம் வைத்துள்ளனர். இது தொடர்பாக விலங்குகள் நல வாரியத்திற்கு அந்த பகுதியைச் சேர்ந்த நபர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அங்கு சென்ற விலங்குகள் நல வாரியத்தினர் இறந்து கிடந்த நாய்கள் மற்றும் உயிருக்குப் போராடிய நாய்களை மீட்டு கோவை அரசு கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
இறந்த நாய்களின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட போது, நாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்றது உறுதியானது. இது குறித்து கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் விலங்குகள் நல வாரியத்தினர் புகார் அளித்தனர். தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாநகராட்சி நிர்வாகம் தான் வெறி நாய் தொடர்பான தொல்லைகளில் இருந்து மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கைகளை வேகப்படுத்த வேண்டும்.
வீடு புகுந்து மிக்சி, டிவி பெட்டியை தூக்கி சென்ற மர்ம நபர்
கோவை கவுண்டம்பாளையம் அம்பேத்கர் நகர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சுஜோஜ் குமார் மனைவி மூகாம்பிகை (38). இவர் கோவையில் உள்ள மருந்துக்கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை அவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். இந்நிலையில், மதியம் அவரது வீட்டு கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் பார்த்தனர்.
இதுகுறித்து மூகாம்பிகைக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனே வீட்டுக்கு வந்து பார்த்தபோது, உடைமைகள் அனைத்தும் சிதறி கிடந்தன. மர்ம நபர் வீட்டு பீரோவில் இருந்த 14 கிராம் தங்கம், ஒரு டிவி, ஒரு மிக்சி, ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மூகாம்பிகை கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.
சினிமாத்துறை சமையலரிடம் ரூ.1.61 லட்சம் மோசடி, ஏ.டி.எம் சென்டரில் நூதனம்
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள திருவல்லம் பகுதியை சேர்ந்தவர் ஷாஜி (42). இவர் மலையாள படப்பிடிப்பு நடக்கும் பகுதிகளில் தங்கி சமையலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கோவையில் மலையாள படப்பிடிப்புக்காக சினிமா கலைஞர்கள் வந்துள்ளனர்.
அவர்கள் காட்டூரில் உள்ள ஓட்டலில் தங்கி உள்ளனர். இவர்களுக்கு கேட்டரிங் செய்து கொடுப்பதற்காக ஷாஜி உள்ளிட்ட சில சமையலர்களும் வருகை புரிந்துள்ளனர். நேற்று ஷாஜி தனது ஏடிஎம் கார்டை எடுத்து கொண்டு பணம் எடுப்பதற்காக காட்டூர் நஞ்சப்பா ரோட்டில் உள்ள ஏடிஎம் சென்டருக்கு சென்றார். அங்கு ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்தார். அப்போது அருகே நின்றிருந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் அவரது ஏடிஎம் பின் நம்பரை தெரிந்துகொண்டார். பின்னர் அவர் திடீரென ஷாஜியிடம் உடனே ஏடிஎம் கார்டை எடுக்கவேண்டாம், சற்று நேரம் கழித்து எடுங்கள் என கூறினார்.
இதனால் அவர் காத்திருந்தார். அப்போது அந்த மர்ம நபர் ஏடிஎம் கார்டை எடுத்து ஷாஜியிடம் கொடுத்து விட்டு சென்றார். பின்னர் அவர் தனது ஓட்டலுக்கு சென்று விட்டார். இரவில் ஷாஜியின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது. அதில், பல கட்டங்களாக ரூ.1.61 லட்சம் எடுக்கப்பட்டதாக தகவல் வந்தது.
இதனால் ஷாஜி தன்னிடம் ஏடிஎம் கார்டு இருக்கையில், பணம் எப்படி எடுக்கப்பட்டது? என குழம்பினார்.
உடனே சந்தேகத்தில் தனது ஏடிஎம் கார்டை எடுத்து பார்த்தபோது, அது தனது கார்டு இல்லை எனவும், ஏடிஎம் சென்டரில் இருந்த மர்ம நபர் கார்டை மாற்றி கொடுத்து ஷாஜியின் ஏடிஎம் கார்டை வைத்து பணம் எடுத்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ஷாஜி காட்டூர் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து பணம் மோசடி செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
விபசார பெண் புரோக்கர் உட்பட 4 பேர் கைது
கோவை சிங்காநல்லூர் நஞ்சப்பா நகரில் உள்ள ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று அங்கு சென்று சோதனை நடத்தினர்.
அதில், அந்த வீட்டில் வெளிமாநில இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து சிங்காநல்லூர் போலீசார் விபசார புரோக்கர்களான சென்னை தி நகரை சேர்ந்த சபியுல்லா(54), மேற்கு வங்காளத்தை சேர்ந்த தப்ஜானி(33), செகந்திராபாத்தை சேர்ந்த 27 வயது மற்றும் கிழக்கு கோதாவரியை சேர்ந்த 32 வயது பெண் ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பாலாஜி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.