கோவை கிரைம் செய்திகள் - 25.4.2025
- by CC Web Desk
- Apr 25,2025
வீட்டு கதவை தட்டி பெண்ணை கத்தியால் குத்திவிட்டு ஓடிய மர்ம நபர்!
கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் மூர்த்தி. இவரின் மனைவி ஸ்ரீமதி(42). இவரது கீழ் வீட்டில் ஸ்ரீமதியின் சகோதரி மகன் சூர்யபிரகாஷ் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.
சூர்யபிரகாஷ் பொள்ளாச்சியில் உள்ள டைல்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் அவரது மனைவி இருந்தார். இந்நிலையில், ஸ்ரீமதி தனது வீட்டு முன்பு நின்று செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது கீழ் வீட்டை யாரோ தட்டுவது போல் சத்தக் கேட்டு கீழே வந்து பார்த்தார்.
அப்போது கையில் கத்தியுடன் நின்றிருந்த மர்ம நபர் கதவை வேகமாக தட்டி கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஸ்ரீமதி நீங்கள் யார்? என கேள்வி எழுப்பினார். இதில் ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர் தகாத வார்த்தைகளால் திட்டி, திடீரென ஸ்ரீமதியை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இது குறித்து ஸ்ரீமதி செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபர் யார்? எதற்காக கதவை தட்டினார் என்பது குறித்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
இரும்பு பீரோவில் வைத்த ரூ.40 லட்சம் மாயம்...
கோவையில் வீடு வாங்க வைத்திருந்த ரூ.40 லட்சம் கொள்ளைபோனது தொடர்பாக வேலைக்கார பெண் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை செல்வபுரம் அசோக் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி கலாவதி (43). கார்த்திகேயன் கடந்த 2017ம் ஆண்டு இறந்து விட்டார். இதன் காரணமாக சமீபத்தில் கலாவதிக்கு இன்சூரன்ஸ் பணம் ரூ.12 லட்சம் கிடைத்தது. மேலும் புதிய வீடு வாங்க விரும்பிய கலாவதி தனது வீட்டை விற்று அதில் வந்த பணம் உட்பட மொத்தம் ரூ.40 லட்சத்தை வீட்டில் உள்ள ஒரு இரும்பு பெட்டியில் வைத்திருந்தார்.
இந்நிலையில், புதிய வீட்டுக்கு பணம் கொடுப்பதற்காக இரும்பு பெட்டியை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த ரூ.40 லட்சத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கலாவதி சந்தேகத்தில் தனது வீட்டில் வேலை பார்க்கும் செல்வபுரத்தை சேர்ந்த நித்யா (28) என்பவரிடம் விசாரித்தார்.
ஆனால், பணம் திருடு போனது தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கலாவதி செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். அதில், தனது வீட்டில் வேலை பார்க்கும் நித்யா மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து பணம் திருடிய நபர் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சும்மா நின்ற நபரை அடித்து உதைத்த போதை ஆசாமிகள்
கோவை கவுண்டம்பாளையம் சுகுணா நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(54). இவர் நேற்று சொந்த வேலை காரணமாக காந்திபுரம் வந்தார். பின்னர் சிங்காநல்லூர் செல்ல காந்திபுரம் சிக்னல் அருகே பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது பைக்கில் வந்த 2 பேர் பாலசுப்பிரமணியன் மீது மோதினர். இதனால் கோபமடைந்த பாலசுப்பிரமணியன் இருவரையும் கண்டித்தார். அப்போது குடிபோதையில் இருந்த பைக் ஆசாமிகள் இருவரும் தகாத வார்த்தைகளால் பேசி பாலசுப்பிரமணியனை அடித்து உதைத்து விட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து பாலசுப்பிரமணியன் காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை தாக்கி விட்டு தப்பி சென்ற 2 பேரை தேடி வருகின்றனர்.
இரவில் ஒன்றாக மது அருந்திய நண்பன் காலையில் மரணம்! அதிர்ச்சியில் நண்பர்!
கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் செல்வம்(55). தச்சு தொழிலாளி. இவர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 25 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். அதன்பின்பு குடிபோதைக்கு அடிமையானார். இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக ரத்தினபுரி கண்ணப்பநகரில் உள்ள தனது நண்பர் செந்தில் என்பவருடன் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார்.
நேற்று முன்தினம் இரவில் செல்வம், தனது நண்பருடன் சேர்ந்து மது அருந்தினார். பின்னர் இருவரும் தூங்க சென்று விட்டனர். மறுநாள் காலையில் செந்தில் எழுந்து பார்த்தபோது செல்வம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவல் அறிந்து வந்த செல்வபுரம் போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
ஒரு கடனுக்கு வட்டி கட்ட மற்றொரு நபருடன் கடன் வாங்கிய தொழிலாளி தற்கொலை முயற்சி!
கோவை பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அம்பராம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சஞ்ஜித்குமார். இவர் கட்டிட வேலை (மேசன்) செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பள்ளிக்கு செல்லும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் தொழிலுக்காக கடந்த ஆண்டு இவரது ஊரை சேர்ந்த பிரசாத்பிரபு என்வரிடம் ரூ. 3 லட்சத்து 40 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். அந்த கடனுக்கு மாதம் வட்டியாக ரூ. 20,000 கொடுக்க வேண்டும் என கூறி பிரசாத் முத்திரைத்தாளில் கையொப்பம் பெற்றுள்ளார்.
முதலில் சஞ்சித் சரியாக வட்டி கட்டி வந்த நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினாலும் அவரது மனைவிக்கு ஏற்பட்ட மருத்துவ செலவுகளினாலும் வட்டி கட்ட முடியாமல் போயுள்ளது. இதனையடுத்து பிரசாத் வட்டி பணத்தைக் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
அதன் காரணமாக சஞ்சித் காளிமுத்து என்பவரிடம் ரூ. 45,000 கந்து வட்டிக்கு பணம் வாங்கி பிரசாத்க்கு கொடுத்துள்ளார். காளிமுத்துவிடம் வாங்கிய கந்துவட்டிக்கும் வாரம் ரூ. 4500 வட்டியாக சஞ்சித் செலுத்தி வந்த சூழலில் 8 வாரங்கள் கழித்து குடும்ப சூழல் காரணமாக வட்டி கட்ட முடியாமல் போனதாக தெரிகிறது.
இதனை அடுத்து பிரசாத் கடுமையான வார்த்தைகளால் சஞ்சித்தையும் அவரது குடும்பத்தினரையும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர் மூன்று தினங்களுக்கு முன்பு சானிப்பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தற்பொழுது ஓரளவு உடல் நிலை தேறிய சஞ்சித் தான் கடன் பெற்ற பிரசாத், காளிமுத்து மற்றும் அவரது கூட்டாளிகள் தன்னைக் கொன்று விடுவார்கள் என்றும் அவர்களால் தன்னுடைய குடும்பத்தினரின் உயிருக்கு ஆபத்துள்ளதாக கூறி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
தான் வாங்கிய கடனுக்கு அதிகமாகவே வட்டி கட்டி இருப்பதாகவும் இருப்பினும் அசல் தொகையை செலுத்த வேண்டும் என்று அவர்கள் தொல்லை செய்வதாகவும் குடும்பத்தினரையும் மிரட்டுவதாகவும் கொலை மிரட்டல் விடுவதாகவும் தெரிவித்துள்ள சஞ்சய் தங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.