கோவை கிரைம் செய்திகள் - 22.4.25
- by CC Web Desk
- Apr 22,2025
ஓரினச்சேர்க்கைக்கு வரவழைத்து வாலிபரிடம் செல்போன் பறிப்பு ... 3 பேருக்கு வலை
கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்த 36 வயது வாலிபர், சில நாட்களுக்கு முன்பு ஓரினச்சேர்க்கையாளர்கள் பழகும் செயலியை தனது செல்போனில் டவுன் லோட் செய்தார். பின்னர் அதில் உள்ள சிலருடன் பேசி வந்தார்.
அப்போது ஒரு வாலிபர் தனது புகைப்படத்தை அனுப்பினார். மேலும் இருவரும் தனிமையில் சந்திக்கலாம் என 36 வயது வாலிபரை அழைத்தார். இதனை நம்பி அவரும் அந்த நபர் கூறிய உடையாம்பாளையத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறத்துக்கு சென்றார்.
அப்போது அங்கு ஒருவருக்கு பதிலாக 3 பேர் நின்றனர். அவர்கள் அந்த வாலிபரை மிரட்டி அவர் வைத்திருந்த செல்போனை பறித்து விட்டு மிரட்டி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த வாலிபர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.
பத்திரப்பதிவு அலுவலக பெண் ஊழியர் தற்கொலை
கோவை வெள்ளலூர் எல்ஜி நகரை சேர்ந்தவர் வரதராஜ் மகள் மனோன்மணி(25). எம்.காம் பட்டதாரியான இவர் வெள்ளலூரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மனோன்மணி குடும்ப பிரச்னையில் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு காரணமா? என உடனடியாக தெரியவில்லை. இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐடி பெண் ஊழியரை ஏமாற்றி நகை, பணம் மோசடி... இன்ஸ்டாகிராம் காதலன் கைது
கோவை காரமடை பகுதியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் கடந்த 2 ஆண்டுகளாக கோவையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
அப்போது அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக அருண் (29) என்பவர் அறிமுகமானார். முதலில் இருவரும் நட்பாக பழகினர். பின்னர் செல்போன் எண்ணை பரிமாறி பேசி வந்தனர். இதில் அவர்களுக்கிடையே காதல் உருவானது.
அப்போது அருண் தான் சொந்தமாக தொழில் செய்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசைவார்த்தை கூறினார். இதனால் அந்த இளம்பெண் நெருக்கமாக பழகினார். இதையடுத்து அருண் தான் செய்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி அந்த இளம்பெண்ணிடம் பல்வேறு கட்டங்களாக 8.5 பவுன் நகை மற்றும் ரூ.3.60 லட்சம் பணம் வாங்கியுள்ளார்.
ஆனால், அதன்பின்பு அருணின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. இளம்பெண்ணிடம் பழகுவதை தவிர்த்து பேச மறுத்தார். இதனை அந்த இளம்பெண் தட்டி கேட்டு தான் கொடுத்த நகை மற்றும் பணத்தை திருப்பி தருமாறு கேட்டார்.
ஆனால் அருண் பணம், நகையை திருப்பி கொடுக்காமல் மிரட்டல் விடுத்தார். இதனால், ஏமாற்றமடைந்த அந்த இளம்பெண் பீளமேடு போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஏமாற்றுதல், மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கோவை பூ மார்க்கெட் தியாகராஜ தெருவை சேர்ந்த பாக்யா அருண் (29) என்பவரை கைது செய்தனர்.
கோயில் கிணற்றில் மோட்டார் திருடிய வாலிபர் கைது
கோவை வெள்ளலூரில் பாலதண்டாயுதபாணி கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில் உள்ள கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மோட்டார் சமீபத்தில் திருடு போனது. இவற்றின் மதிப்பு ரூ. 25 ஆயிரம் ஆகும்.
இது குறித்து கோயிலை பராமரித்து வரும் உப்பிலிபாளையம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த சுரேஷ்பாபு(44) என்பவர் சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கோயில் கிணற்றில் மோட்டாரை திருடியது வெள்ளலூர் ரோடு வைகை நகரை சேர்ந்த பால்பாண்டி(40) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.