சாலையில் மாடுகளை மேய விட்டால் கடும் நடவடிக்கை பாயும் - கோவை மாநகராட்சி எச்சரிக்கை
- by David
- Mar 17,2025
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சாலைகளில் மாடுகளை சுற்ற விடுவதால் வாகன ஓட்டிகள், சாலையில் செல்லும் பொது மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்களால் சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை பல காலகட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கடந்த காலங்களில் உயிரிழப்பு போன்ற மோசமான விளைவுகளும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.
2 நாட்களுக்கு முன்னர் கோவை மாநகரம் உக்கடம் பகுதியில் சாலையில் 5 மாத குழந்தையுடன் நடந்து சென்ற பெண் மீது சாலையில் விடப்பட்டிருந்த மாடு மோதியதில் தாய்க்கும் குழந்தைக்கும் காயம் ஏற்பட்டது. இதில் குழந்தையின் தலை பகுதியில் காயங்கள் ஏற்பட்ட படங்கள் செய்திகளிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளிவந்தது.
இந்நிலையில் இந்த சம்பவம் அறிந்த அந்த பகுதி கவுன்சிலர், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகளை வலியுறுத்தினார். இதை தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற புல்லுக்காடு பகுதியில் சுற்றித் திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றுள்ளனர்.
மேலும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது அபராதம் மற்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டுவிட்டதால் கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் சாலை ஓரமாக குப்பைகள் கொட்டும் வழக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் குப்பைகள் சாலைகளில் கொட்டப்படுகிறது.
கோவை காந்திமாநகர் பகுதியில் பொதுமக்கள் நலன் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் மாடுகளை சாலையில் சுற்ற விடும் மாடுகளின் உரிமையாளர்கள், மாடுகள் இதுபோல கொட்டப்படும் குப்பைகளை உண்ணுவதை அனுமதிக்கின்றனர். இதனால் இரவு நேரங்களில் சாலையில் செல்பவர்கள் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.
வாயில்லா ஜீவன்கள் என்ன செய்யும்? இவற்றை முறையான வழியில் தொழுவத்தில் வைத்து உணவு வழங்காமல் சாலையில் மேய விடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதியே செல்லும் வாகன ஓட்டிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.