வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள் வெள்ளலூர் பகுதியில் 61 ஏக்கர் நிலப்பரப்பில் வெள்ளலூர் குப்பை கிடங்கு அருகே 2020ல் ஆரம்பிக்கப்பட்டது. 

மொத்தம் ரூ.168 கோடி மதிப்பிலான இந்த திட்டத்திற்கு கோவை மாநகராட்சி, 50% நிதி (ரூ.84 கோடி) தமிழக அரசு மானியம் 50% (ரூ.84 கோடி) கொண்டு முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கொரோனா காலத்தில் இந்த திட்டத்தின் கட்டுமான பணிகள் நின்றுபோனது. அதன் பின் 3 ஆண்டுகளாக இதில் எந்த முன்னேற்றமும் இல்லை.

வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகள் மீண்டும் நடைபெறவேண்டும் என்பதை அரசிடம் வலியுறுத்த கோவை மக்கள் சிலர் குழுவாக சேர்ந்து வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய மீட்பு குழுவை செப்டம்பர் 2023ல் உருவாக்கினர்.

கோவை மக்களுக்காக கொண்டுவரப்பட்டு தற்போது பாதியில் நிற்கும் இந்த ஒருங்கிணைந்த பேருந்து திட்டம் மீண்டும் துவங்கபட மாநில அரசிடமும்,  மாவட்ட ஆட்சியர் போன்ற உயர் அதிகாரிகளிடமும் மனுக்களை வழங்கி, இந்த பணியை வேகப்படுத்த இந்த குழு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் மீட்பு குழுவை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மோகன் கடந்த மார்ச் மாதம் வெள்ளலூர் பேருந்து நிலைய திட்டம் பற்றி முதலமைச்சரின் கவனத்திற்கு(Chief Minister's Special Cell) கடிதம் எழுதியபோது, அது அங்கிருந்து கோவை மாநகராட்சி தலைமை பொறியாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தலைமை பொறியாளரிடமிருந்து அவருக்கு அதன் பின்னர் பதில் வழங்கப்பட்டது. அதில் "வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமான பணியானது அரசின் இறுதி உத்தரவிற்கு பின்னர் தொடரப்படும்" என கூறப்பட்டு இருந்தது.

அரசு நினைத்தால் இந்த திட்டத்தை உடனே மீண்டும் ஆரம்பிக்க உத்தரவிட முடியும். இந்த திட்டத்திற்காக மக்கள் பணம்  பல கோடி செலவாகி உள்ளது. இந்த பேருந்து நிலையம் அமைவதால் மாநகரில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், போத்தனூர், வெள்ளலூர் வளர்ச்சியடைய உதவியாக இருக்கும் என வெள்ளலூர் பகுதி மக்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் மோகன் மீண்டும் இந்த பேருந்து நிலைய திட்டம் குறித்து கோவை மாநகராட்சியிடம் கேள்விகளை மனு மூலம் எழுப்பியிருந்தார். பாதியில் நிற்கும் கட்டுமான பணியை தொடர்ந்து நடத்திடடவும் அதை முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். 

இது குறித்து மாநகராட்சியின் தலைமை பொறியாளர் இன்று (20.9.2024) அவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 

அதில்,  "கட்டுமான பணிகள் 37% நடைபெற்று முடிந்துள்ளது. இப்பணிக்கு மாநகராட்சி பங்களிப்பு ரூ.52.46 கோடி பட்டியல் தொகை வழங்கப்பட்டுள்ளது. அரசு மானியம் ரூ.84.00 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்படவில்லை. மேற்கூறிய விபரங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநர் மூலமாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அரசிடமிருந்து அறிவுரைகள் பெறப்பட்டவுடன் மேற்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற விபரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது," என்று கூறியிருந்தார்.

இது பற்றி மோகனிடம் பேசியபோது அவர், " மக்கள் வரிப்பணம் பல கோடி அந்த கட்டிடத்தின் மீது பயன்படுத்தப்பட்டு உள்ளது. 37% வரை கட்டுமானம் நடைபெற்று உள்ளது என்கிறார்கள் அரசு தரப்பில். கடந்த சில ஆண்டுகளாக அந்த கட்டுமான பணிகள் பாதியில் நிற்கிறது. இந்நிலையில் இப்படி இருப்பதால் அதன் தரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதை முழுமையாக முடிக்க அரசு முயற்சிகளை விரைந்து எடுக்க வேண்டும்," என்றார்.

கோவை மாநகராட்சி மாமன்றம் தரப்பில் இந்த திட்டத்தை மீண்டும் உடனடியாக ஆரம்பிக்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினால் இதில் முன்னேற்றம் ஏற்படும். இல்லையென்றால் இந்த திட்டப்பணி இப்படியே நீடித்து வந்தால் பயனில்லாமல் தான் போகும். கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் இந்த திட்டம் மீண்டும் துவங்க படவேண்டும் என தீர்மானம் கொண்டுவந்தால் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.