கோவை மாநகருக்குள் அமைந்துள்ள ஒரு நீர்நிலையை தேர்ந்தெடுத்து, அதை மாதிரி ஏரியாக தரமுயர்த்த கோவை மாநகராட்சி தரப்பில் திட்டமிட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவை மாநகரில் உள்ள நீர் நிலைகளை பாதுகாப்பது குறித்த ஆலோசனை கூட்டம் கோவை மாநகராட்சி தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்பட்டது. இதில் மாநகராட்சி அதிகாரிகளுடன் சமூக ஆர்வலர்கள், அரசு சாரா அமைப்பினர், இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கோவை மாநகரில் உள்ள நீர் நிலைகளின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு விளக்கினர். நீர்நிலைகளின் எல்லைகளை கவனிப்பது,  அங்கு ஆக்கிரமிப்புகள் இருந்தால், அவற்றை அகற்றுவது என இதுபோன்ற பல விஷயங்கள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் STP எனும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகள் குறித்தும், புதிதாக அமைக்கப்படவேண்டிய நிலையங்கள் குறித்தும் விவாதங்கள் நடைபெற்றது.  

இத்துடன், கோவை மாநகராட்சியுடன் சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு சாரா அமைப்பினர் இணைந்து மாநகரில் உள்ள ஒரு நீர்நிலையை தேர்ந்தெடுத்து, அதை முழுவதுமாக சுத்தப்படுத்தி, புதுப்பித்து மாதிரி ஏரியாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது போன்ற ஒரு மாதிரி ஏரியில் முன்னெடுக்கப்படும் வழிமுறைகளை பின்னர் மற்ற நீர்நிலைகளில் முன்னெடுக்க திட்டம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.