கட்டுமானம் மற்றும் தொழிற்சாலை தேவைகளுக்கு கோவை மாநகராட்சி சார்பில் மும்முறை சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகம் செய்யும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது என தகவல் வெளியாகி இருக்கிறது.

இதற்காக, லாரி மூலமாகவும் டிராக்டர்கள் மூலமாகவும் கட்டுமானம் மற்றும் தொழிற்சாலை பணிகளுக்கு நீர் விநியோகம் செய்யும் சேவையில் ஈடுபடுபவர்கள் தங்களின் விவரங்களையும், என்ன ரக வாகனங்களை இந்த பணிகளுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதையும், தினசரி எத்தனை லிட்டர் தண்ணீர் தங்களுக்கு தேவைப்படும் என்பதையும் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சி இந்த திட்டத்திற்கென தண்ணீர் தொட்டிகளை குறிப்பிட்ட இடங்களில் கட்டவுள்ளது என தெரிய வருகிறது. இந்த தொட்டிகளில் இருந்து நீர் விநியோகத்தை எந்நேரம் வேண்டுமானாலும் செய்யலாம் எனவும் அவ்வாறு விநியோகம் செய்யப்படும் நீர் என்பது கட்டுமான துறை சார்ந்தவர்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் அரசு நிர்ணயித்த கட்டணத்திலேயே கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இதுபோன்று நீர் வினியோகம் செய்யும் சேவைகளில் ஈடுபடுபவர்கள் தங்கள் விவரங்களை cityengineer.coimbatore@gmail.com என்ற இமெயில் முகவரி மூலமாகவோ அல்லது 9944064948 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணுக்கோ அனுப்பலாம் என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.