கோவை கணபதி - பீளமேடுக்கு இடையே இந்திய உணவுக் கழகத்துக்கு (எஃப்.சி.ஐ/FCI) சொந்தமான 1.3 கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலை பீளமேடு மற்றும் சத்தியமங்கலம் சாலையை கணபதி வழியாக இணைக்கிறது.

இந்திய உணவுக் கழகத்தின் பிரம்மாண்ட குடோனுக்கு செல்ல அமைக்கப்பட்ட தனியார் சாலையாக இது இருந்தாலும் இதன் மூலமாக தான் காந்தி மா நகர், பீளமேடு பகுதி, சரவணம்பட்டி மற்றும் அதன் தொடர்ச்சியில் உள்ள பிற முக்கியமான இடங்களுக்கு மக்கள் எளிதில் செல்ல முடியும்.

கோவை மாநகராட்சியின் 20, 26, 28வது வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

காலத்திற்கேற்ப பராமரிக்கப்படாமல் இருந்ததாலும் தொடர்ந்து நாள் ஒன்றுக்கு சுமார் 200  லாரிகள் இதில் சென்று வருவதால் இந்த சாலை பல ஆண்டுகளாக படுமோசமான நிலையில் இருந்தது.

அதிக அளவில் குண்டும் குழியுமாக இருந்ததால் மழைக்காலங்களில் சேற்றுடன் குழிகளில் வாகனங்கள் மோதிக்கொள்வதும் அதிகம் இங்கு காணப்பட்டு வந்தது. இதை புதுப்பிக்க அப்போதைய கோவை பாராளுமன்ற உறுப்பினர், கலெக்ட்டர், பொதுமக்கள் என அனைவரும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர்.

அதையடுத்து,  கடந்த 2023 மார்ச் மாதத்தில் எஃப்.சி.ஐ- நிர்வாகமே இந்த சாலையை சிமெண்ட் சாலையாக தரம் உயர்த்த முன்வந்து பணிகளை துவங்கியது. 1.3  கிலோ மீட்டர் சாலை ஒரு வழியாக 2023 இறுதியில் முடிவுபெற்று திறக்கப்பட்டது.

நேர்த்தியாக இந்த சாலை அமைக்கப்பட்டாலும் இதில் 10க்கும் மேற்பட்ட, வழக்கத்தைவிட உயரமான,அகலமான வேகத்தடைகள் உள்ளது. இதனால் இந்த வழியே நல்ல சாலை இருந்தாலும் அதை பொதுமக்கள் பெரிதும் பயன்படுத்த சிரமப்படும் சூழல் ஏற்பட்டது. 
உயரம் அதிகமாக இருப்பதால் கார்கள், ஆட்டோக்கள் ஆகியவை செல்லும் போது அதன் அடிப்பகுதிகள் உரச அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.

இதன் காரணமாகவே இந்த வேகத்தடைகளை தவிர்த்து செல்லவும் வாகனவோட்டிகள் முயல்கின்றனர்.

இந்நிலையில், இந்த சாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயரமான வேகத்தடைகளை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, வேகத்தடையின் உயரத்தினை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். 

இதையும் செய்யுங்க சார் - மக்கள் கோரிக்கை!
இந்த சாலைக்கு சத்தி சாலை வழியே செல்லும் போது இடது புறத்தில் பெருமளவு அடர்த்தியான செடிகள் உள்ளன. இங்கு படையே நடுங்கும் அளவுக்கு நாய்கள் சுற்றி திரிகின்றன.

என்னதான் மின் விளக்குகள் அமைக்கப்பட்டாலும் பல இடங்களில் மரங்கள் அதை மறைத்து விடுகின்றன. 3 டாஸ்மாக் பார்கள் உள்ளது. எனவே இந்த பகுதி மக்கள் செல்ல மேலும் பாதுகாப்பானதாக ஆக சில நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.