வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்படும் குப்பைகளால் ஏற்படும் பாதிப்பிலிருந்து நிவாரணம் கேட்டு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முன்பு வழக்கு நடைபெற்று வருகிறது.
பல கட்டங்களாக இந்த வழக்கு தீர்ப்பாயத்தின் முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. 2017ல்லேயே வெள்ளலூர் குப்பை கிடங்களில் தரம் பிரிக்கப்படாத (மக்கும் குப்பை & மக்காத குப்பை - பிளாஸ்டிக், கண்ணாடி) குப்பைகளை சேர்க்க கூடாது என்ற உத்தரவும், இதற்கு முன்னர் அங்கு சேர்ந்துள்ள லட்சக்கணக்கான டன் குப்பைகளை முறையாக அழிக்கவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இதற்கடுத்து பல கட்ட நகர்வுகள் நடைபெற்றாலும் அப்பகுதி மக்கள் வேண்டும் தீர்வு கிடைக்க தாமதம் ஆகி வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி விசாரணை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர்கள் புஷ்பா சத்யநாராயணா மற்றும் சத்யகோபால் கோர்லபடி முன்பு நடைபெற்றது. இதன் அடுத்த கட்ட விசாரணை செப்டம்பர் 3ஆம் தேதி நடைபெறும் முன்னரே கோவை மாநகராட்சி, குப்பைகளை கையாள உருவாக்கியுள்ள நுண்ணுயிர் சிறு மறுசுழற்சி மையங்கள் குறித்த விவரம், இதற்கு முன்னர் குப்பை கிடங்களில் கொட்டப்பட்ட பழைய குப்பைகளை எப்போது, எப்படி அழிக்க முடியும் என்கிற திட்ட அறிக்கை, மேலும் குப்பை கிடங்கில் புதிதாக கொட்டப்படும் குப்பைகள் எப்போதைக்குள் நிறுத்தப்படும் என்கின்ற விவரம் இவை அனைத்தையும் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில் வெள்ளலூர் குப்பை கிடங்கின் தற்போதைய நிலை குறித்த விரிவான அறிக்கை, கிடங்கில் தேங்கியுள்ள பழைய குப்பைகளை கையாளுவது குறித்த செயல்திட்டம், மற்றும் கிடங்கில் முற்றிலுமாக குப்பைகளை கொட்டாமல் இருக்க செயல்திட்டம் அடங்கிய அறிக்கைகளை பசுமை தீர்ப்பாயம் முன்பு கோவை மாநகராட்சி சமர்ப்பித்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
1) கோவை மாநகராட்சியின் வெவ்வேறு இடங்களில் மொத்தம் 50 Decentralized Treatment Plants அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் எங்கும் bio mining process நடைபெறுவதில்லை. அந்த பணிகள் வெள்ளலூர் compost yard-ல் மட்டுமே நடைபெறுகிறது. (இதில் 34 மையங்கள் Micro Composting Centres - MCC ஆக உள்ளன. இதில் 21 செயல்பாட்டில் உள்ளது. 8 மையங்கள் Material Recovery Facility - MRF ஆக உள்ளது. இந்த 8ம் செயல்பாட்டில் உள்ளது.)
2) இதன் மூலம் கோவை மாநகராட்சி தரப்பில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளை இந்த decentralized மையங்களுக்கு அனுப்ப முடியும் எனவும் இதனால் வெள்ளலூர் குப்பை கிடங்களில் புதிதாக குப்பை கொட்டுவதை தடுக்க முடியும்.
3) கோவை மாநகரில் உருவாகும் அனைத்து புது குப்பைகளும் வெள்ளலூர் குப்பை கிடங்கில் தான் கொட்டப்படுகிறது என்பது தவறான தகவல். அவை மாநகரின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள Processing
centeகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது.
4) பழைய கழிவுகளை குப்பை கிடங்கில் இருந்து அகற்றும் முதல்கட்ட முயற்சியில் 7,52,056 MT (METRIC TON) அகற்றப்பட்டது. இதனால் சுமார் 50 ஏக்கர் நிலம் குப்பை கிடங்கில் மீட்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்தில் 7,43, 247 MT பழைய குப்பைகளை அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தோராயமாக ரூ.58.54 கோடி செலவாகும். இதற்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.
5) கடந்த 8 மாதங்களில் (ஜனவரி 2024- ஆகஸ்ட் 2024) வெள்ளலூர் குப்பை கிடங்களில் குப்பைகள் காட்டப்படுவது 81% இருந்து 18% மாக மாற்றப்பட்டுள்ளது.