கடந்த நிதியாண்டு வரை இந்தியாவில் 38.50 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளது. இதில் 95% வாகனங்கள் 2 சக்கர மின்சார வாகனங்கள், 1.67 லட்சம் வாகனங்கள் 4 சக்கர மின்சார வாகனங்கள், மற்றும் 7,700 வாகனங்கள் மின்சார பேருந்துகள்.

இந்தியாவில் விற்கப்படும் சுமார் 40% நான்கு சக்கர மின்சார வாகனங்களும், சுமார் 70% 2 சக்கர மின்சார வாகனங்களும் தமிழ் நாட்டில் உருவாக்கப்பட்டவை. நாடு முழுவதும் மின்சார வாகனங்களின் விற்பனை மற்றும் பயன்பாடு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது என்பதில் மாற்று கருத்து இல்லை.

கோவை மாநகரில் 20 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைத்திட கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் டாடா பவர் கம்பெனி லிட், மும்பை (TATA POWER FAST CHARGING STATION)  புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டன.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் தற்போது கோவை வ.ஊ.சி. பூங்கா பகுதியில் முதல் சார்ஜிங் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இந்த சார்ஜிங் நிலையங்களில் டாடா நிறுவனத்தின் EZ சார்ஜ் எனும் சார்ஜிங் கட்டமைப்பு அமைக்கப்படும். இதனால் 1 மணி நேரத்தில் ஒரு மின்சார காருக்கு தேவைப்படும் 80% சார்ஜ் வரை செய்ய முடியும்.

இதையும் சேர்த்து மொத்தம் அமையவுள்ள 20 சார்ஜிங் நிலையங்களில் 3 ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைகிறது, அவிநாசி சாலை, வ.ஊ.சி. பூங்கா பகுதி, வாலாங்குளம் மற்றும் காளப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 2 சார்ஜிங் நிலையங்களும், சரவணாமப்பட்டி, புரூக்பீல்டு அருகே அமைந்துள்ள மாநகராட்சி பார்க்கிங் பகுதி, சிங்காநல்லூர், டைடல் பார்க், காந்திபுரம் கிராஸ்கட் சாலை, பெரியகுளம், துடியலூர் ஆகிய பகுதிகளில் தலா 1 சார்ஜிங் நிலையமும் அமைகிறது.