கோவை மாநகரில் உள்ள பொதுமக்கள் தங்களது சேவைகளை விரைவாக பெறும் வகையில் 'மக்களைத் தேடி மாநகராட்சி' என்ற சிறப்புமிக்க திட்டம் கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற உள்ளது. கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் உள்ள காமராஜர் ரோடு மணி மஹால் திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த முகாம் நடைபெற்றது.

'மக்களைத் தேடி மாநகராட்சி' சிறப்பு முகாம் இனி 15 நாட்களுக்கு ஒருமுறை கோவை மாநகராட்சியில் உள்ள  மண்டலம் வாரியாக நடைபெறும். இதனால் சம்மந்தப்பட்ட மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு அதிகாரிகளும் ஒரே இடத்தில் இருந்து மக்களிடம் மனுக்களை பெறமுடியும். விண்ணப்பங்களை வழங்க வரும்போது உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தால், அதேநாளில் தீர்வு பெற்றுக்கொள்ள முடியும்.

என்னென்ன சேவைகள் பெற முடியும்?

சொத்து வரி மற்றும் காலியிட பெயர் மாற்றம், காலியிட வரி விதிப்பு, வரி குறித்த அனைத்து வித திருத்தங்கள், வரிப்புத்தகம் வினியோகம், புதிய கட்டடங்களுக்கு வரி விதிப்பு, குடியிருப்பு முறையில் இந்து வணிக முறைக்கு மற்றும் வணிக பயன்பாட்டில் இருந்து குடியிருப்பு முறைக்கு மாற்றம், புதிய குடிநீர் இணைப்பு மற்றும் குடிநீர் தொடர்பான புகார்கள், தெருவிளக்கு அமைத்தல், மழை நீர் வடிகால் துார்வாருதல், சாலை வசதி, பராமரிப்பு பணி, மாநகராட்சி பள்ளி பராமரிப்பு, பிறப்பு - இறப்பு சான்று கோருதல், திருத்தம் செய்தல், தொழில் உரிமம் கோருதல்,  டி.எஸ்.எல்.ஆர்., நகல் மற்றும் பெயர் மாற்றம், கட்டட அனுமதி விண்ணப்பம், மனை வரன்முறைப்படுத்துதல், சர்வே வரைபடம் கோருதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்த முகாமில் பெறலாம்.

முதல் நாளே நல்ல வரவேற்பு!

இன்று நடைபெற்ற 'மக்களைத் தேடி மாநகராட்சி' - கிழக்கு மண்டல சிறப்பு முகாமில், வருவாய் பிரிவில் 115 மனுக்கள் வந்தது, அதில் 40 மனுக்கள் மீது உடனடித் தீர்வு காணப்பட்டது. இதே போல் பொறியியல் பிரிவில் 145 மனுக்கள் வந்தது, 21 மனுக்கள் மீது உடனடித் தீர்வு வழங்கப்பட்டது. 

பொது சுகாதார பிரிவு, 17 மனுக்கள் இதில் உடனடித் தீர்வு 4 மனுக்கள்; நகரமைப்பு பிரிவில் 121 மனுக்கள், இதில் உடனடித் தீர்வு 6 மனுக்கள்;  மேலும் இதர வகைகள் 146 மனுக்கள் பெறப்பட்டது. மொத்தமாக இன்று கிழக்கு மண்டலத்தில் 544 மனுக்கள் பெறப்பட்டது. இதில் மொத்தம் 71 மனுக்கள் மீது உடனடி தீர்வுகாணப்பட்டுள்ளது . நிலுவையில் 473 மனுக்கள் உள்ளது. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.