கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இதற்கு முன்னால் இருந்த அளவுக்கு குப்பை தொட்டிகள் இப்போது இல்லை.

இதுபற்றி கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சிலரிடம் கேட்டபோது, அவர்கள் "குப்பை தொட்டிகள் பல இடங்களில் அகற்றப்பட்டு விட்டன. குப்பைகளை நீங்கள் (மக்கள்) தரம் பிரித்து உங்கள் வீட்டிலேயே வையுங்கள், நாங்கள் உங்கள் வீட்டிற்கு காலையில் வந்து  பெற்றுக்கொள்வோம். எங்களிடமிருந்து குப்பைகளை மாநகராட்சி வாகனங்கள் காலையில் எடுத்து சென்றுவிடுவார்கள்," என்றனர்.

ஒரு வகையில் இது வரவேற்கத்தக்க முடிவு தான். கோவை மாநகரில் தினமும் 1100 டன் குப்பைகள் சேகரமாகிறது. இதை முறையாக தரம் பிரிக்காமல் அனுப்பி வைத்தால் குப்பைகளை உரமாக்கும் பணிக்கு பெரும் சவாலாக அமையும். எனவே இந்த முயற்சியால் ஒரு பலன் உள்ளது.  என்றாலும் ...

முன்பு ஒருவர் ஒரு கடையில் ரூ.20க்கு குடிநீர் பாட்டில் வாங்கி குடித்து விட்டு, பாதி தூரம் சென்றுகொண்டு இருக்கும்போதே அதில் குடிநீர் தீர்ந்துவிட்டால், அருகில் உள்ள குப்பை தொட்டியில் வீசி செல்ல முடியும். ஆனால் இப்போது அதுபோன்ற வழி இல்லை என்பதால் எத்தனை பேர் அந்த பாட்டிலை தங்களிடமே வைத்துக்கொண்டு, மறுநாள் மாநகராட்சி குப்பை வண்டி வருகையில் அதை போட்டு விடலாம் என்று கருதுவார்கள்? இது போல பல உதாரணங்கள் உண்டு.

இப்போது குப்பைக் தொட்டிகள் இல்லை என்றாலும் அது இருந்த இடத்தில் இரவு குப்பைகளை கொட்டும் வழக்கம் மாநகரில் கணக்கிட முடியாத மக்களிடம் உள்ளது. முக்கியமாக சில துரித உணவு கடைகள், பேக்கரி, டீ-கடை ஊழியர்களிடம் தங்கள் கடைகளில் சேகரமாகும் குப்பைகளை இரவு நேரத்தில் வந்து குப்பை தொட்டி முன்னர் இருந்த இடத்தில்கொட்டும் வழக்கம் உள்ளது.

புது நடவடிக்கை

கோவை மாநகராட்சியில் சில வார்டுகளில் இதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் சில நடவடிக்கை எடுத்துள்ளனர். உதாரணத்திற்கு இரவு நேரத்தில் பொது இடத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க கோவை மாநகர் வார்டு 64ல் இரவு வாட்ச் மேன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த வார்டில் காலை நேரங்களில் குப்பை தூய்மை பணியாளர்களிடம் வழங்க முடியதாவர்களுக்காக இரவு 2 மணி நேரம் குப்பை வாங்க வழிமுறை செய்யபட்டுள்ளது.

மாலை 7-9 மணி வரை அந்த வார்டில் காலை குப்பைகளை தர முடியாத 50 வீடுகளில் இரவு நேரம் பெறப்படுகிறது. அவர்களையும் மெதுவாக காலை நேரத்திலேயே குப்பையை வழங்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு திறந்த வெளியில் குப்பைகளை கொட்டப்படுவதை தடுக்க சில முயற்சிகள் உள்ளது.

மாநகராட்சிக்கு வேண்டுகோள்!

அக்டோபர் 2023ல் கோவை மாநகராட்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டல வார்டு பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் நடைபாதை கடைகள் நடத்தும் வியாபாரிகள், அவர்களின் கடைகளில் சேகரமாகும் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகளை பச்சைநிற குப்பை தொட்டிகளிலும் மற்றும் மக்காத குப்பைகளை நீல நிற குப்பை தொட்டிகளிலும் சேகரித்து மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் பச்சை மற்றும் நீல நிற குப்பை தொட்டிகளை 2023 நவம்பர் மாத இறுதிக்குள் கடைகள் முன்பு முறையாக வைத்து பொதுமக்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இதை முறையாக பின்பற்றும் கடைகள் எத்தனை? முறையாக கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்கும் கடைகள் எத்தனை? இதுபற்றி ஆய்வு மற்றும் நடவடிக்கை தேவை. உணவு பொருள் விற்பனை செய்யும் அனைத்து கடைகளிலும் இதுபோன்ற குப்பை தொட்டிகள் இருப்பதை உறுதி செய்யவேண்டும்.

மீண்டும் குப்பை தொட்டிகள் வேண்டும்

கோவை மாநகரின் முன்பு இருந்த குப்பை தொட்டிகள் 1 டன் அளவு கொண்டவை. அவை சீக்கிரம்  நிரம்பிவிடுவதால் தொட்டியின் அருகே சிதறியவாறு பொதுமக்கள் சிலர் குப்பைகளை வீசி செல்லும் வழக்கத்தை வைத்திருந்தனர். இதை குறைக்க,  சென்ற ஆண்டு மார்ச் மாதம்,  2 டன் கொள்ளளவு கொண்ட குப்பைதொட்டி ஒன்றை மாநகராட்சி வாங்கியது. துருப்பிடிப்பதைத் தடுக்கும் பாதுகாப்பு உலோக மற்றும் கரிம பூச்சுகளால் பூசப்பட்ட ஜி.ஐ. சீட் எனும் உலோகத்தால் தயாரிக்கப்பட்ட இந்த குப்பைதொட்டியை 10 எண்ணிக்கைகளில் வாங்க திட்டமிட்டு இருந்தது.

மாநகரில் அதுபோன்று பல இடங்களில் குப்பை தொட்டிகள் வரும் என்று எதிர்பார்த்தல் அவ்வாறு குப்பை தொட்டிகள் வராமல், அதற்கு மாறாக இருந்த குப்பை தொட்டிகளும் அகற்றப்பட்டு வருகிறது. குப்பைகளை தூய்மை பணியாளர்களிடம் மட்டுமே தர பொதுமக்களுக்கு வாய்ப்பு இருந்தால், அது பொது இடங்களில் வீசப்பட்ட வாய்ப்புக்கள் அதிகம்.

இதற்கு பதில் சோதனை முறையில், பெரிய அளவு கொண்ட குப்பைத்தொட்டிகளை வாங்கி சில இடங்களில் மட்டும் வைத்து, அதில் பொதுமக்கள் மட்டும் Solid & Wet குப்பைகளை தனித் தனியே போட அமைப்புகள் ஏற்படுத்தி வழங்கினால் குப்பைகளை தினசரி எடுத்து செல்லும் தூய்மை பணியாளர்களுக்கு பாதிப்பு குறையும். அவ்வப்போது குப்பைகளை குப்பைத்தொட்டிகளில் போடக்கூடிய வாய்ப்பு இருந்தால், மக்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் சுமை இருக்காது.

சோதனை அடிப்படையில் வழங்கலாம்!

கோவை மாநகரில் உள்ள பல வீதிகளில் மேட்டிலும், பள்ளத்திலும், தெரு நாய் தொல்லையுடனும், மழையிலும் அந்த குப்பை வண்டிகளில் குப்பைகளை வைத்து இழுத்து செல்லவேண்டிய நிலையில் தூய்மை பணியாளர்கள் உள்ளனர்.

அவர்களின் சுமையை குறைக்கவும், எளிதில் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த குப்பை தொட்டிகளை மீண்டும் வைக்க மாநகராட்சி ஒரு சோதனை முயற்சியை செய்து பார்க்கலாம்.

குறிப்பாக குப்பை பொது இடங்களில் கொட்டப்படுவதை தவிர மாநகராட்சி சில இடங்களில் CCTV வைத்துள்ளது நல்ல விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது.

எனவே குப்பை தொட்டிகளை மீண்டும் வைக்கும் போது CCTV கேமரா வைத்தால், விதிமீறி  Solid & Wet குப்பைகளை தவிர, குப்பை தொட்டிகளுக்கு வெளியே குப்பைகளை வீசும் நபர்களையும், படுக்கை, தலையணை, என பல பொருட்களை வீசும் நபர்களையும் பிடிக்க உதவியாக இருக்கும்.