ஜூன் மாத இறுதியில் கோவை மாநகரில் உள்ள 5 பொது கழிப்பிடங்களில் மொத்தம் ரூ.20 லட்சம் மதிப்பில் நவீன தொழில்நுட்பம் கொண்ட கழிப்பிட மேலாண்மை மற்றும் கருத்து தெரிவிக்கும் சாதனம் பொருத்தப்பட்டது.

இந்த சாதனம் மூலம் கழிப்பிடங்களில் உள்ள காற்றின் தரம், தண்ணீர் தொட்டியில் உள்ள நீரின் அளவு, கழிப்பிடங்களை பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை போன்றவற்றை கண்காணிக்க முடியும், மேலும் இதன் மூலம் பயனாளர்கள் கழிப்பிடத்தை பற்றிய கருத்துக்களை தெரிவிக்கவும் முடியும். இந்த சாதனம் பொருத்தப்பட்ட கழிப்பிடங்களில் ஒன்று கோவை அரசு பெண்கள் பாலி டெக்னிக் கல்லூரி அருகேயும் உள்ளது.  இதை அடுத்த 3 மாதத்தில் 25 பொது கழிப்பிடங்களில் அமைத்திட கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

மாநகராட்சி ஒருபக்கம் இவ்வாறு பொதுமக்கள் நலன் கருதி முயற்சிகளை முன்னெடுத்தால், தனியார் துறை சார்ந்தவர்களும் மாநகராட்சியின் முயற்சிகளுக்கு உதவி வருகின்றனர்.  

கடந்த 10 ஆம் தேதி, கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளின் கழிவறை பயன்பாட்டிற்காக சுமார் ரூ.3.75 இலட்சம் மதிப்பீட்டில் 75 எண்ணிக்கையிலான இந்திய வகை கழிவறை கோப்பைகளை கோயம்புத்தூர் எவரெஸ்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் சார்பில் அந்நிறுவனத்தின் பொது மேலாளர் சுமிதா பத்மநாபன் நாயர் கோவை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கி இருக்கின்றார்.

இது போன்று அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியால் சில நல்ல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் ...

மாநகரில் உள்ள கோவை சென்ட்ரல் பேருந்து நிலையத்தில் உள்ள இலவச கழிவறை (ஆண்கள்) முற்றிலும் பயன்படுத்த முடியாத அளவு உள்ளது. (இதே நிலைமையில் தான் கோவை டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கழிவறையும் உள்ளது). இது இலவச கழிப்பிடம் என்பதால் இப்படி தான் இருக்கும் என்று அதன் அருகே உள்ள கட்டண கழிப்பிடத்தை பயன்படுத்தலாம் என்றால், அதில் கட்டணத்தை நாணயமாகவோ அல்லது நோட்டாகவோ தான் செலுத்த முடியுமே தவிர அங்கு QR குறியீடு மூலம் UPI வழியே கட்டணம் செலுத்தும் அம்சம் இல்லை. ஆனால் அதே இடத்தில் பொது மக்கள் கருத்துக்களை தெரிவிக்க மாநகராட்சி தரப்பில் QR குறியீடு உள்ளது.

இங்கு மட்டுமா இந்த நிலைமை என்றால், கோவை ஆம்னி பஸ் ஸ்டாண்ட் அருகே கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு என் 48ல் அமைக்கப்பட்டுள்ள பொது சிறுநீர் கழிப்பிடத்தில், நிலைமை மிக மோசமாக உள்ளது.

இதை 6 மாதங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டதாக அங்கிருக்கும் சிலர் கூறினர். அதற்குள் செல்ல முடியாத அளவு மோசமாக இருக்கிறது. இத்துடன் 'குடி' மகன்கள் அட்டகாசம் அங்கு அதிகம். குடித்து விட்டு அங்கு மது பாட்டில்களை வீசி செல்வது வாடிக்கையாகி உள்ளது.

இதுபற்றி பொதுமக்களிடம் கருத்து கேட்டபோது, அவர்கள் கூறியது: இலவசமாக கொடுத்தால் இப்படி தான் மக்கள் நடந்துகொள்வார்கள். மாநகராட்சி அனைத்து பொது கழிப்பிடங்களிலும் சிறிய கட்டணத்தை வசூல் செய்தால் தான் இதுபோன்ற அசுத்த செயல்கள் குறையும் என்கின்றனர்.

கோவை மாநகராட்சி அந்த நவீன தொழில்நுட்பம் கொண்ட கழிப்பிட மேலாண்மை சாதனத்தை 25 கழிப்பிடங்களில் நிறுவுவதற்கு முன்னர், கோவையில் உள்ள அனைத்து பொது கழிப்பிடங்களிலும் நிலைமை எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்து, இதை பொதுமக்களிடம் எடுத்து சொல்லி, நமது மாநகரின் முக்கியமான கட்டமைப்புகளை நாம் தான் நல்ல வழியில் பராமரிக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு campaign மூலம் கொண்டு சேர்க்கவேண்டும். ஸ்மார்ட் சிட்டியாக கோவை மாறவேண்டும் என்றால் இது போன்ற பொது இடங்களில் மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி பாடம் எடுப்பது அவசியம்.

மேலும் தற்போது மோசமாக உள்ள கழிப்பிடங்களை சரி செய்து, தினமும் அந்த கழிப்பிடங்களை சுத்தப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியில் இயங்கும் அனைத்து பொது கட்டண கழிப்பிடங்களிலும் QR கட்டண முறையையும் செயல்படுத்த நடவடிக்கை வேண்டும்.

நவம்பர் 19 என்பது உலக கழிப்பறை தினம். இந்த நாள் கழிப்பறைகளை முறையாக அணுக வேண்டியதன் அவசியத்தையும், அன்றாட வாழ்க்கைமுறையில் நல்ல சுகாதாரத்தைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கிறது.

இந்த நாளுக்கு முன்னர் கோவை மாநகராட்சி கோவை மாநகரில் உள்ள பொது கழிப்பிடங்களில் நல்ல மாற்றத்தை கொண்டுவருவதுடன், பொது மக்களிடம் சுகாதாரம் பற்றியும், பொது கழிப்பிடங்களை சுத்தமாக வைக்க அவர்களின் பங்கு என்ன என்பதை பற்றிய விழிப்புணர்வை கொண்டு சேர்க்கவேண்டும் என எதிர்பார்ப்போம்.