தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 'மக்களுடன் முதல்வர்' எனும் புதிய திட்டத்தை துவக்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் நடத்தி, பொதுமக்கள் அதிகமாக அணுகும் அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளை அவர்களிடம் இருந்து பெற்று அதற்கு விரைவான தீர்வளிக்க திட்டமிடப்பட்டு, முகாம்கள் நடத்தப்பட்டன.
முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட துறைகளால் 30 தினங்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திட்டம் துவக்கி 2 மாதத்திலேயே கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதல்வரின் முகவரி துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தில் நடத்தப்பட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு கோரிக்கைகளின் அடிப்படையில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.
இந்நிலையில் இந்த திட்டம் போலவே கோவை மாநகரில் உள்ள பொதுமக்கள் தங்களது சேவைகளை விரைவாக பெறும் வகையில் 'மக்களைத் தேடி மாநகராட்சி' என்ற சிறப்புமிக்க திட்டம் கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற உள்ளது. காமராஜர் ரோடு மணி மஹால் திருமண மண்டபத்தில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது.
கோவையில் 'மக்களுடன் முதல்வர்' திட்டம் போல 'மக்களைத் தேடி மாநகராட்சி' திட்டம்! எங்கு, எப்போது நடைபெறுகிறது? இதோ தகவல்!
- by David
- Sep 25,2024