சூலூர் பகுதியில் அரசு திட்டங்கள் சரியாக நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்யவும், மக்கள் குறைகளை கேட்டு அதற்கு தீர்வு வழங்கவும், வரும் 18 ஆம் தேதி (வியாழன்) அன்று சூலூர் பகுதிக்கு கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் வருகை தர உள்ளார்.

அவர் வரும் 18 ஆம் தேதி (18.7.2024) காலை 9 மணி முதல் அடுத்த நாள் காலை 9 மணி வரை அங்கேயே தங்குகிறார். அவருடன் கோவை மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய அதிகாரிகளும், சூலூர் வட்ட முக்கிய அதிகாரிகளும் தங்குகின்றனர். அவர்களுடன் இணைந்து அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு சீராக சென்று சேர்கிறதா என்பதை கலெக்டர் களஆய்வு செய்வார்.

அதேபோல பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிவார். இதற்காக ஜூலை 18 ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் என பல்வேறு அரசு அலுவலகங்களில் கோரிக்கை மனுக்கள் பெறப்படும்.

இதற்கு ஒரு படி மேலாக, ஜூலை 18 ஆம் தேதி, மாலை 4 மணி முதல் 6 மணி வரை சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கலெக்டரிடம் நேரடியாக புகார் மனுக்களை தர முடியும்.

'உங்களை தேடி உங்கள் ஊரில்' எனும் அரசு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஒரு மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு தாலுகாவில் ஆட்சியர் தங்கி மக்களின் குறைகளை கேட்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.