இன்றும் நாளையும் கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள மக்களின் குறைகளை நேரடியாக கேட்டு நிவர்த்தி செய்ய, கோவை மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) கிராந்தி குமார் அங்கு நேரில் அதிகாரிகளுடன் சென்றுள்ளார்.

'உங்களை தேடி உங்கள் ஊரில்' எனும் அரசு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஒரு மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு தாலுகாவில் ஆட்சியர் தங்கி மக்களின் குறைகளை கேட்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

பொள்ளாச்சி சென்ற கோவை ஆட்சியர் இன்று முதலாவதாக நகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதை அடுத்து மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடை, நகர்புற நல்வாழ்வு மையம், அரசு கல்லூரி மாணவர்கள் தாங்கும் விடுதி, மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தினார். மேலும் மீன்கரை சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.

இதை தொடர்ந்து திடீரென  பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.