கோவை மாநகரில் தெருவிளக்கு பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு? புது ஒப்பந்தங்களுக்கு தயாராகும் மாநகராட்சி!
- by David
- Jan 17,2025
கோவை மாநகராட்சியில் உள்ள தெருவிளக்குகளை பராமரிக்க 2022 ஜனவரியில்
போடப்பட்ட ஒப்பந்தம் இந்த ஆண்டு ஜனவரியுடன் நிறைவடைவதை அடுத்து, இதற்கு அடுத்து போடப்படவுள்ள ஒப்பந்தம் சில மாற்றங்களைகொண்டதாக இருக்கும். இதனால் இதுவரை தெருவிளக்கு தொடர்பாக மக்கள் சந்தித்த சிரமங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி என்ன மாற்றம் ஒப்பந்தத்தில் வரவுள்ளது என்பது குறித்த விவரம் பின்வருமாறு :-
கோவை மாநகராட்சியில் 2006 முதல் 2011 வரை மொத்தம் 72 வார்டுகள் இருந்தன. பின்னர் 2011ல் கோவை மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் செய்யப்படுவதை அடுத்து 72 வார்டுகள் 60 ஆக திருத்தம் செய்யப்பட்டது. அதற்கடுத்து 2011ல் கோவை மாநகராட்சியுடன் 11 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டன.
இந்த புது பகுதிகள் மொத்தம் 40 வார்டுகள் கொண்டவையாக இருந்தன. ஏற்கனவே இருந்த 60 உடன் 40 வார்டுகள் சேர்க்கப்பட்டு மொத்தம் இப்போது வரை 100 வார்டுகள் கோவை மாநகரில் உள்ளன. இவை வடக்கு, கிழக்கு, தெற்கு, மத்தியம் மற்றும் மேற்கு என 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நிர்வாகம் செய்யப்படுகிறது.
2011ல் 100 வார்டுகளாக மாற்றம் செய்யப்படுவதற்கு முன்னர் இருந்த 60 வார்டுகளில் மொத்தம் 53,521 தெருவிளக்குகள் இடம்பெற்றுள்ளன. இதுவரை இந்த தெருவிளக்குகளை இயக்க, பராமரிக்க ஒரே நபர் தான் ஒப்பந்ததாரராக இருந்துள்ளார்.
ஆனால் இவருடனான ஒப்பந்தம் இந்த மாதத்தில் நிறைவடைய உள்ளது என்பதால் இதற்கு அடுத்து ஒரே நபருக்கு இந்த ஓப்பந்தத்தை வழங்காமல் மண்டலம் வாரியாக ஒப்பந்தங்கள் செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதனால் தெருவிளக்குகளை பராமரிப்பது, அதில் பழுது ஏற்பட்டால் சரி செய்வது ஆகியவை வேகமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கோவை மாநகராட்சியில் எந்தெந்த பகுதிகளில் எல்லாம் கூடுதல் தெருவிளக்குகள் தேவைப்படும் எனவும் மாநகராட்சி ஆய்வு செய்து வருகிறது.
மாநகராட்சியின் கவனத்திற்கு :- கோவை மாநகரில் உள்ள சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள் அருகே உள்ள மரங்களின் கிளை, இலைகள் அவற்றை மறைக்கும் படி வளர்ந்துள்ளன. இதனால் மின் கம்பத்தில் இருந்து கீழே வெளிச்சம் பெரிதும் வருவது இல்லை. மாநகராட்சி செய்யும் ஆய்வில் இதையும் கணக்கிட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.