கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே உள்ள பஸ் ஸ்டாப் அருகே மகளிர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கோவை மாநகர காவல் துரையின் இருமுனை தகவல் தொடர்பு அமைப்பான SAFE KOVAI எனும் 'சகோ' திட்டத்தை கோவையின் பொறுப்பு அமைச்சரான தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். 

இது என்ன திட்டம்?

இந்த இருமுனை தகவல் தொடர்பு அமைப்பானது கோவை மாநகரில் 200 பேருந்து நிறுத்தங்களில் (பஸ் ஸ்டாப்) பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பஸ் ஸ்டாப்களில் இந்தக் கட்டமைப்பை நிறுவுவதற்காக ஒரு கம்பம் அமைத்து அதில் இந்த கேமரா உடன் ஸ்பீக்கரும், ஒரு அவசர உதவி பட்டன்னும் பொருத்தப்படும். இந்த கேமரா அந்த பஸ் ஸ்டாப் பகுதி முழுவதையும் கண்காணிக்ககூடியதாக இருக்கும். மேலும் இது கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படும்.

பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்கு ஏதேனும் அச்சம் ஏற்படும்படி நகர்வுகள் அங்கு இருந்தால், இந்த கேமரா அமைப்பில் வரக்கூடிய அவசர உதவி பட்டனை பயன்படுத்தி காவல்துறையினருடன் தங்கள் நிலை குறித்து விளக்க முடியும். அதற்காக இதில் மைக் வசதி இடம்பெறும்.

காவல்துறையினரும் பெண்களுடன் அங்கிருந்து இந்த ஸ்பீக்கர் மூலமாகவும் பேச முடியும். மேலும் அவர்கள் பாதுகாப்புக்காக உடனே ஒரு ரோந்து வாகனத்தை அங்கு அனுப்பி வைக்கவும் முடியும். 

கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி உதவி மூலம் முதல் கட்டமாக 200 பேருந்து நிறுத்தங்களில் இந்த வசதியை கொண்டு வர கோவை மாநகர காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.