சாலைகளை நோக்கி கோவை மாநகருக்குள் உள்ள 8500 கண்காணிப்பு கேமராக்கள் புவிசார் அடையாளமிடப்பட்டது
- by David
- Feb 11,2025
கோவை மாநகர காவல் துறையினர் தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் இருக்கக்கூடிய கண்காணிப்பு கேமராக்களை, குறிப்பாக சாலைகளை நோக்கி பொருத்தப்பட்டு இருக்கக்கூடிய கண்காணிப்பு கேமராக்களை மாநகரத்தின் எந்தெந்த பகுதிகளில் இருக்கிறது என்பதை உடனுக்குடனே அறிந்து கொள்ளக்கூடிய வகையில் 'ஜியோ டேக்' எனும் புவிசார் அடையாளமிட்டு வருகின்றனர்.
இவ்வாறு ஜியோ டேக் செய்வதன் மூலம் ஒரு குற்றமோ அல்லது விபத்தோ நடைபெற்றால் சம்பவ இடத்தின் அருகே எங்கெல்லாம் கண்காணிப்பு கேமரா இருக்கிறது என்பதை காவல் துறையினர் நேர விரையம் இல்லாமல் அறிந்து கொள்வார்கள். இதன் மூலம் அந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு தேவையான முக்கிய வீடியோ தகவல்கள் வேகமாக கிடைக்கும்.
மேலும் இவ்வாறு கேமராக்களை தங்களிடம் உள்ள புவியியல் தகவல் அமைப்பு வரைபடத்தில் காவல் துறையினர் குறித்து வைத்துக் கொள்வதன் மூலம் கோவை மாநகரின் எந்தெந்த பகுதிகளில் எல்லாம் கண்காணிப்பு கேமராக்கள் அதிகம் உள்ளன, எந்தெந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவுவது குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர்களுக்கு தெரிய வரும்.
இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் கூறுகையில், தற்போது வரை மாநகரத்தில் உள்ள 1600 பகுதிகளில் சாலைகளை நோக்கி பொருத்தப்பட்டு தனியாருக்கு சொந்தமாக இருக்கக்கூடிய 8500 கண்காணிப்பு கேமராக்கள் புவிசார் அடையாளமிடப்பட்டுள்ளது எனக் கூறினார்.
இவற்றுடன் வாகன நம்பர் பிளேட்டுகளை தானாகவே அடையாளம் காணக்கூடிய 30 கேமராக்களும், வேறு சில 150 க்கும் அதிகமான கண்காணிப்பு கேமராக்களும் புவிசார் அடையாளமிடப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகர காவல் துறைக்கு 1400 கண்காணிப்பு கேமராக்கள் கிடைக்கப்பட உள்ளது. இவற்றை மாநகரின் பல்வேறு இடங்களிலும் மாநகருக்குள் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளிலும் பொறுத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இந்த 1400 கண்காணிப்பு கேமராக்களில் முக அடையாளத்தை கண்காணிக்க கூடிய அதிநவீன மென்பொருள் வசதி இடம் பெறும் எனத் தெரிய வருகிறது.