கோவை மாநகர காவல் துறை சார்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரீல்ஸ் எனும் குறு வீடியோ போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பொது மக்கள் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். இதில் கலந்துகொள்பவர்கள் சைபர் குற்றம், போதை பொருள் ஒழிப்பு, சாலை போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு ஆகிய கருவில் தங்களுக்கு விருப்பமான தலைப்பில் 45 விநாடிகளுக்கு ரீல்ஸ் வீடியோவாக எடுத்து @Coimbatore_City_Police  எனும் கோவை மாநகர காவல்துறையின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கை 13.8.2024க்குள் டேக் செய்ய வேண்டும்.

போட்டியாளர்கள் விரும்பினால் மேலே குறிப்பிட்டுள்ள 4 கருவில் 1க்கும் மேற்பட்டவற்றை தேர்வு செய்து ரீல்ஸ் எடுத்து சமர்ப்பிக்கலாம்.

வெற்றியாளர்கள் 17.8.2024 அன்று அறிவிக்கப்படுவார்கள். இந்த போட்டியில் பங்கேற்கும் அனைவரும் காவல் துறை தரப்பில் இருந்து சான்றிதழ்கள் வழங்கப்படும். ஒவ்வொரு கருவின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர்களுக்கு மொத்த பரிசு தொகையான ரூ.1 லட்சம் பிரித்து வழங்கப்படும்.

இதுபற்றி கோவை மாநகர ஆணையர் V.பாலகிருஷ்ணன் கூறுகையில்:-

இந்த ரீல்ஸ் மூலம் மக்களிடம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள கருவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த போட்டியின் நோக்கம்.

யார் வேண்டுமானாலும் ரீல்ஸ் எடுத்து எங்களுக்கு அனுப்பலாம். இந்த போட்டியில் நல்ல பரிசு தொகையை வழங்க உள்ளோம். பரிசை தாண்டி,  குறிப்பாக போதை பொருள் ஒழிப்பு மற்றும் ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை மக்களிடையே எடுத்துச்சொல்ல தரமான ரீல்ஸ் வீடியோக்களை நீங்கள் வழங்கும் போது அதை எங்களின் அனைத்து சமூக வலைதள பக்கங்களிலும் பகிர திட்டமிட்டு உள்ளோம்.

உங்கள் வீடியோக்களை நிறைய மக்கள் பார்க்கும் போது அது உங்களுக்கு பெருமை, காவல் துறைக்கும் இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த அது உதவியாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூடுதல் தகவல்களுக்கு அழைக்கவும் 9894040459.